Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக சதியாலேயே அன்புமணிக்கு போட்டியாக சகாயம்: ராமதாஸ் கொந்தளிப்பு!

கன்னியாகுமரி: பா.ம.க முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்ததற்கு போட்டியாகவே அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக வரவேண்டும் என சொல்வதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

குமரி மாவட்ட பா.ம.க.பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. பொதுக்குழுவுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தமிழகத்திலே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், தூத்துக்குடி, கடலூர், குமரி போன்ற மாவட்டங்களுக்கு உடனடியாக வெள்ள நிவாரணத்தை வழங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மூன்று மாதத்துக்கு முன்பே மழையால் பயிர்கள், ரப்பர், நெல், மீன்பிடி, செங்கல் சூளை போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக பஞ்ச கால படியை அரசு கொடுக்க வேண்டும்.

ஆளும் கட்சிகளால் இதுவரை குமரியில் 1400க்கும் மேற்பட்ட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளன. அணைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். தொழில் வளங்களை பெருக்க வேண்டும். தமிழ்நாட்டில்  உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் சரிபாதி அளவு சேறு மட்டுமே உள்ளது." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பா.ம.க .முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சகாயம் ஐ.ஏ.எஸ்-முதல் வேட்பாளராக வரவேண்டும் என சொல்கிறார்கள். குறிப்பாக அன்புமணியின் வளர்ச்சியை பிடிக்காத திமுகவினர்தான் இதன் பின்னணியில் உள்ளனர். 

சகாயம் கிரானைட் ஊழல்  தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டவர். அவர் தனது அறிக்கையை தற்போதுதான் தாக்கல் செய்துள்ளார்.  அவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சகாயத்தால் எப்படி ஒரு கட்சியை இப்போது தொடங்கி மக்களை சந்திக்க முடியும்? எனக்கு தெரிந்தவரை சகாயத்திற்கு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. அவர் குடிமைப்பணியில் தொடரவே விரும்புகிறார். ஆனால் சிலர்  வேண்டுமென்றே விஷமனத்தனமான பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

ஊழலற்ற ஆட்சியை அன்புமணியால் மட்டுமே தரமுடியும். மத்திய அமைச்சராக இருக்கும்போதே பல சாதனைகளை செய்தவர் அன்புமணி. 

மக்கள் மாற்றத்தை விரும்பி விட்டார்கள். புதிய வாக்காளர் மத்தியில் அன்புமணிக்கே ஆதரவு கிடைத்துள்ளது. மக்களின் ஆதரவும் பா.ம.க.வுக்கே கிடைத்துள்ளது. மதுவில்லாத தமிழகம், ஊழலற்ற ஆட்சி விரைவில் அன்புமணி தலைமையில் அமையும். எங்கள் தலைமையை ஏற்று வரும் ஊழலற்ற கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம்” என்றார்.

- த.ராம்

 

எடிட்டர் சாய்ஸ்