Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசமைப்பு சட்டத்தை கெஜ்ரிவால் படிக்க வேண்டும் என்கிறது பா.ஜ.க.!

புதுடெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்க டெல்லி அரசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. முதலில் அரசமைப்புச் சட்டத்தை கெஜ்ரிவால் படிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்து உள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நிதியமைச்சர் அருண் ஜெட்லி இருந்தபோது, பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் தனிநபர் ஆணையத்தையும் அவர் அமைத்து உத்தரவிட்டார்.

டெல்லி போன்ற யூனியன் பிரதேச அரசுக்கு இதுபோன்ற விசாரணை ஆணையத்தை தன்னிச்சையாக அமைக்கும் அதிகாரம் கிடையாது என்று மத்திய அரசுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக் கடிதம் எழுதினார். அதே நேரம், அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் காவல், பொது ஒழுங்கு மற்றும் நில வரம்புகள் உள்ளிட்டவையே வருகின்றன. அமைச்சரவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் விசாரணை ஆணையம் அமைக்க பேரவை அலுவல் விதிகளில் இடம் உள்ளது. அதன்படி, விசாரணை ஆணையம் தொடர்பான கோப்புகள் எதையும் துணைநிலை ஆளுநரின் பார்வைக்கு அனுப்ப வேண்டியதில்லை என்று கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பான கோப்பினை பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், ''டெல்லி அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் சட்டத்துக்குப் புறம்பானதா, இல்லையா என்பதை அறிவிப்பதற்காகவே, டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பான கோப்புகளை பிரதமர் அலுவலகத்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதில் பிரதமர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? தனிநபர் விசாரணை ஆணையத்தை சட்டத்துக்குப் புறம்பானது என அறிவிப்பாரா அல்லது அனுமதிப்பாரா? பிரதமரின் முடிவு எதுவாயினும் விசாரணை நடைமுறைகள் பாதிக்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி கிரிக்கெட் சங்க (டி.டி.சி.ஏ.) முறைகேடு விவகாரம் தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் உதவியை தனிநபர் விசாரணைக் குழுத் தலைவரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்பிரமணியம் நாடியுள்ளார். இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் தனக்கு உதவுவதற்காக சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளை வழங்குமாறும் அஜித் தோவலுக்கு கோபால் சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா டெல்லியில் கூறும்போது, ''டெல்லி கிரிக்கெட் சங்கம் என்பது கம்பெனிகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். அதுனுடன் தொடர்புடைய விவகாரத்துக்கு விசாரணைக் குழு அமைக்க டெல்லி அரசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. ஆனால், கெஜ்ரிவாலின் அறிவுறுத்தலின்படி விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் சுப்பிரமணியம் நாடகமாடுகிறார்.

அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக முடிவுகளை எடுப்பதே கெஜ்ரிவாலுக்கு வழக்கமாக உள்ளது. இந்த விசாரணை நடவடிக்கை என்பதும்கூட அவருடைய அவதூறு நடவடிக்கையின் ஒரு பகுதிதான். முதலில் அரசமைப்புச் சட்டத்தை கெஜ்ரிவால் படிக்க வேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ