Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா, கருணாநிதி உள்பட தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து!

புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

முதல்வர் ஜெயலலிதா: மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்கிடவும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் எவரும் இல்லை என்ற நிலையினை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேம்படவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட அனைவருக்கும் தங்கு தடையின்றி தரமான கல்வி கிடைத்திடவும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதையும், அதன் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் புதிய வரலாறு படைத்து வருவதையும் மக்கள் அனைவரும் நன்கறிவர்.

சமூகப் பொருளாதார நிலையில் தமிழக மக்கள் ஏற்றம் பெற்று விளங்கிட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சீர்மிகு திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வினை வளமாக்கிக் கொள்வதுடன், உறுதி கொண்ட உள்ளத்துடன் ஒன்றுபட்டு நின்று, தடைகளைத் தகர்த்து, அயராது உழைத்து பொற்காலத் தமிழகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி: தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக வேதனைகளைத் தந்த 2015ம் ஆண்டு மறைந்து புதுவாழ்வு தந்திடப் பொங்கி வருகிறது 2016 ஆங்கிலப் புத்தாண்டு! தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2011 வரை முன்னணி மாநிலம்! அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது இந்தியாவிலேயே கடைசி மாநிலம்!

அ.தி.மு.க. அரசின் பால்விலை உயர்வால்-மின்கட்டண உயர்வால்-பேருந்துக் கட்டண உயர்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா, ஐந்தாண்டுகள் ஆகியும் விலைவாசியைக் குறைக்கவில்லை, தி.மு.க. ஆட்சி உருவாக்கிய மின் திட்டங்கள் தந்த மின்சாரம் அல்லாமல், ஒரு மெகாவாட் மின்சாரத்தைக்கூட உற்பத்தி செய்திடவில்லை.

சென்னை உயர் நீதிமன்றப் பாதுகாப்பிற்குத் தமிழகக் காவல்படை வேண்டாம், மத்திய காவல்படையே தேவை என்ற உயர் நீதிமன்றத்தின் முடிவும், காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்ற அறிவிப்பும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுக் கிடப்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

சென்னைத் துறைமுகம்‍ மதுரவாயல் மேம்பாலச் சாலைத்திட்டம் அ.தி.மு.க. அரசால் முடக்கப்பட்டு, துறைமுக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஜெயலலிதா ஆட்சி, உரிய நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததால், சென்னைவாழ் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. இப்படி அ.தி.மு.க. ஆட்சி அனைத்து முனைகளிலும் தந்த அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!

இந்நிலையில், தி.மு.க. அரசு அன்று உருவாக்கி 2015இல் பயன் தந்த மெட்ரோ இரயில் திட்டம், மின்சாரப் பிரச்னையைத் தீர்த்த வடசென்னை, மேட்டூர், வல்லூர் மின் திட்டங்கள் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் மீண்டும் உருவாக-தொழில் வளம் சிறக்க-அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணி நீர்வளம் பெருக்க-விவசாயம் செழிக்க- தமிழகம் வளமும் நலமும் பெற-அனைத்திற்கும் வாயிலாக ஆட்சி மாற்றம் காண வருகிறது ஆண்டு 2016 என்பதை நினைவுபடுத்தி, தமிழக மக்களுக்கு எனது உளமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.   

பாமக நிறுவனர் ராமதாஸ்:
புத்தாண்டு எப்போதும் நம்பிக்கையுடன் தான் பிறக்கிறது என்ற போதிலும், பல நேரங்களில் அது ஏமாற்றத்தில் தான் முடிகிறது. 2015 ஆம் ஆண்டையும் நம்பிக்கையுடன் தான் வரவேற்றோம்; ஆனால், அது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எண்ணற்ற ஏமாற்றங்களைத் தந்ததுடன், கடைசி நேரத்தில் வெள்ளத்தின் வடிவில் மிகப்பெரிய சோகத்தையும், சேதத்தையும் பரிசாக அளித்துச் சென்றிருக்கிறது. ஆனால், 2016 ஆம் ஆண்டு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2015 ஆம் ஆண்டில் தமிழக மக்கள் எண்ணற்ற சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தன. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஆனால், அதைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்களைத் தவிக்கவிட்டது.

தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்றவேண்டும் என்றால் 2016 ஆம் ஆண்டில் முதலில் மாற்றமும் அடுத்து முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதற்காக இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மதிமுக பொது செயலாளர் வைகோ: மலர்ந்து இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழகத்தில் மறுமலர்ச்சி உறுதியாகக் கிட்டும் என்ற நம்பிக்கையை விதைத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தோளோடு தோள் இணைந்து கடமை ஆற்றுவோம் வெற்றியை முன்னெடுப்போம் வீறு நடைபோடுவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வேளாண்மை செழிக்க வேண்டும்; தொழில்கள் வளர வேண்டும்; தொழிலாளர் நிலை உயர வேண்டும்; வேலை வாய்ப்பு பெருக வேண்டும்; நலிந்தோர் நல்வாழ்வு பெற வேண்டும்; மகளிர் ஆடவருக்கு இணையாக உயர வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் அனைத்துப் பிரிவு மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்;

இறைவனும், இயற்கையும் அதற்குத் துணை நிற்க வேண்டும்.தமிழகம் வளரவும், உயரவும், சிறக்கவும் புத்தாண்டு வழி காட்ட வேண்டும் என விழைகிறேன். இனிய புத்தாண்டை வரவேற்கிறேன். நான் நெஞ்சார நேசிக்கும் தமிழ் மக்களுக்கு என் நம்பிக்கை நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close