Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி. மசோதா தாமதத்துக்கு பா.ஜ.க. அரசே காரணம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

புதுடெல்லி: சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறாததற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பிடிவாதப்போக்கே காரணம் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில், வேலை நாட்களை குறைத்ததாலும், தாமதமாக ஊதியம் வழங்குவதாலும், ஊரகப் பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையிலும் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சி 8.1 முதல் 8.5 சதவீதமாக உயரும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் இருந்தது. அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகள், அதிக அளவில் முதலீடுகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு என மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பொருளாதாரத்திலும் குறிப்பிடும்படியான எந்த வளர்ச்சியுமின்றி, 2015-ம் ஆண்டு மந்தமாகவே கடந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரையும் தனது இல்லத்துக்கு வரவழைத்துப் பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களவையில் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா நிறைவேற ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது, 3 முக்கிய ஆட்சேபங்களை காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். அந்த ஆட்சேபங்கள் குறித்து அமைச்சரவையில் விவாதித்துவிட்டு பதிலளிப்பதாகக் கூறிய மோடி, ஒரு மாதமாகியும், அதுபற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் முழுக்க முழுக்க அரசின் கையில் உள்ளது. எங்களது ஆட்சேபங்களை ஏற்றுக் கொண்டு, ஜி.எஸ்.டி. மசோதாவில் அரசு திருத்தம் செய்கிறதா? இல்லையா எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை ஏற்று, ஜி.எஸ்.டி. மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசால் கண்டுபிடிக்க இயலவில்லை. எங்களது 3 ஆட்சேபங்களில், 2 ஆட்சேபங்களை தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கிட்டத்தட்ட ஏற்றுக் கொண்டார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற அறிகுறிகள் அரசிடம் தென்பட்டன. ஆனால், அந்த நம்பிக்கை சிறிது காலமே நீடித்தது. அரசின் பிடிவாதப்போக்கால், பல முக்கிய மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் முடங்கியுள்ளன. தவறான பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close