Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெள்ள நிவாரண நிதியை மொத்தமாக தர முடியாது: வெங்கையா நாயுடு

சென்னை: தமிழக அரசுக்கு வெள்ள நிவாரண நிதியை மொத்தமாக தர முடியாது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, ''நான் வெளிநாட்டில் இருந்ததால் ஜல்லிக்கட்டு நிலவரம் குறித்து எனக்கு தெரியாது. செய்திகளை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிப்பு விவகாரத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மழை வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டு உடனடியாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். அதேபோல், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, நான் உள்பட பல அமைச்சர்கள் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் பேசி இருக்கிறோம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக மத்திய அரசு ராணுவம், கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவற்றை அனுப்பி முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டது. மேலும், நிவாரண நிதியை ஒட்டு மொத்தமாக கொடுக்க முடியாது. பகுதி பகுதியாகத்தான் தர முடியும். வெள்ளத்தால் வீடுகள் இழந்தவர்களுக்கு மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

மீண்டும் இந்த மாதிரியான பெரும் பாதிப்புகளை தடுப்பதற்கு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி, நகராட்சி குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கும் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்.

2016–ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் சிறப்பாக அமையும். முந்தைய காங்கிரஸ் அரசு தான் நிலம் கையகப்படுத்தும் திட்டம், ஜி.எஸ்.டி. மசோதா போன்றவற்றை கொண்டு வந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்காக அந்த மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகிறது. இந்த சட்டங்கள் நிறைவேறினால் நாட்டின் பொருளாதாரம் 1.5 சதவீதம் வளர்ச்சி அடையும். இந்த ஆண்டாவது காங்கிரஸ் நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறை இருந்தால் இந்த மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்." என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ