Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டு நடக்குமா? பொன்.ராதாகிருஷ்ணனை முட்டிய காளை!

அரியலூர்: ஜல்லிக்கட்டு நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் தமிழக மக்கள் இருக்க,  மத்திய அரசின் சார்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  'எப்படியாவது ஜல்லிகட்டை நடத்தியே தீருவோம்' என்று சொல்லிகொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவரை மாடு முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய அரசியலில் விவாத பொருளாய் அமைந்திருப்பது ஜல்லிகட்டு.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் பாளையபாடியில் நடந்த ஒரு கூட்டத்திற்காக பொன் ராதாகிருஷ்ணன்,  திருச்சியிலிருந்து வந்துகொண்டிருந்தார். செம்பியகுடி என்ற இடத்தில்,  மக்கள் மாடுகளுடன் வந்து, ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என்று மனுக்களை கொடுத்தனர்.

மனுவை படித்துவிட்டு, ஜல்லிக்கட்டு காளையின் கொம்பை பிடித்தார். கையில் இருந்த மோதிரம் மாட்டின் கொம்பில் சிக்கிகொள்ள, கையை எடுக்க முயற்சித்தபோது அந்த காளை திடீரென சிலுப்பி லேசாக பொன்.ராதாகிருஷ்ணனை இடித்தது. இதில் அவரது வலது கை நசுங்கி ரத்தம் கொட்டத் தொடங்கியது. உடனே காளையின் உரிமையாளர் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பிறகு காயத்திற்கு கட்டு போட்டுக்கொண்டு கூட்டத்திற்கு வந்தார்.

கையில் காயத்தோடு மேடையில் மைக் பிடித்த பொன் ராதாகிருஷ்ணன், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் மக்களை களத்தில் இறங்கி சந்திக்கவேண்டும். பி.ஜே.பி யின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் அப்படி செய்தால் வெற்றி நம் வசம். நாம் எது செய்தாலும் தடுக்கவேண்டும் என்ற நினைப்போடு காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. ஜல்லிக்கட்டை நடத்த பிஜேபி முயற்சித்து வரும் நிலையில், முட்டுக்கட்டை போடுவது காங்கிரஸ்தான்” என்றார்.

எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்த நினைப்பவருக்கே இந்த நிலையா?

- எம்.திலீபன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ