Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியை திணறடித்த கனிமொழி போஸ்டர்கள்!

திருச்சி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பிறந்தநாளையொட்டி இன்று, திருச்சியில் திரும்பிய பக்கமெல்லாம் கனிமொழியை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி அலப்பரை செய்துள்ளார்கள் கனிமொழி ஆதரவாளர்கள்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி திருச்சியில் அவரது ஆதரவாளர்கள்(?!) வாழ்த்துப்போஸ்டர்கள் ஒட்டி அதகளம் செய்துவிட்டனர் . 'நாடாளுமன்ற நாயகியே, அரசியலின் அரசியே, தத்துவ தலைவரின் தவப்புதல்வியே, தமிழ் மொழிகாக்கும் கனிமொழியே, தலைவரின் தவப்புதல்வியே, வீர வரலாற்றில் விளைந்த புன்னகையே, முத்திரையர் சமுதாயத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த பாரத கவிஞரே, காவிய தலைவியே என அனல் கக்கும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் திருச்சி நகர் முழுக்க ஒட்டப்பட்டுள்ளன.

இது கடந்த வருடத்தை விட அதிகமாகவே உள்ளது. இது,  திமுகவில் கனிமொழி ஆதரவாளர்கள் அதிகரிக்கிறார்களா என்கிற அளவுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, திருச்சி திமுகவில் போஸ்டர் ஒட்டுவது தொடர்கதையாகி உள்ளது. திமுக இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் திருச்சி வந்தால் போஸ்டர் ஒட்டுவார்கள்.  இதேபோல் அவரது பிறந்தநாளுக்கு ஒட்டினார்கள். அடுத்து கடந்த 29-ம் தேதி ஸ்டாலின் திருச்சிக்கு வந்தபோது, அழகிரி ஆதரவாளர்கள், 'முடியட்டும் சர்வாதிகாரம், விடியட்டும் ஜனநாயகம் 2016'. திமுக மீட்பு பயணம் எனும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை திருச்சி முழுக்க ஒட்டியிருந்தார்கள்.

பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டது வேறு விஷயம். அடுத்த சில நாட்களில் புத்தாண்டு வந்ததை ஒட்டி முன்னாள் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள், அதே சைஸ், அதே அளவில்,  '2016 ல் திமுக ஆட்சி அமைய உறுதிமொழி ஏற்போம்' என புத்தாண்டு வாழ்த்து போஸ்டர் ஒட்டினார்கள். கடந்த சில மாதங்களாக திருச்சியில் திமுகவினர் போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் வரும் 30-ம்தேதி, அழகிரியின் பிறந்த நாள் வருவதால் திகிலடித்துக்கிடக்கிறது திருச்சி மாநகரம். திமுக உள்ளிட்ட மற்ற எல்லா கட்சிகளை விடவும் அதிகமாக போஸ்டர் ஒட்டி அண்ணனை ஆச்சர்யப்படுத்தப்போவதாக அழகிரியின் 'விழுதுகள்' கூறிவருவதால் கலக்கத்தில் கிடக்கிறது திருச்சி.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ