Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முப்தி முகமது சயீத்தும்...50 வருட காஷ்மீர் அரசியலும்!

காஷ்மீரின் அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கு தடம் பதித்த முப்தி முகமது சயீத் மரணமடைந்து இருக்கிறார். மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக, ஜம்மு காஷ்மீரின் முதல்வராக நமக்கெல்லாம் அறிமுகமான அவரின் வாழ்க்கை விறுவிறுப்பான திரைக்கதை போன்ற பக்கங்களைக் கொண்ட ஒன்று.

பிஜ்பெஹரா நகரத்தில் எண்பது வருடங்களுக்கு முன்னால் சூபி வழிபாட்டுத் தளங்களின் பொறுப்பில் இருக்கும் பீர்கள் குடும்பத்தில் பிறந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலையில் சட்டம் பயின்ற பின்னர் காஷ்மீரிலேயே வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கினாலும், அவரின் கண்கள் அரசியலிலேயே நிலைத்து இருந்தன.

ஷேக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியை துவக்கி காஷ்மீரை ஆண்டுகொண்டிருந்த ஹரிசிங்கின் ஒடுக்குமுறை ஆட்சியை எதிர்த்துப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்திய-பாகிஸ்தான் எனும் இரு தேசங்களுக்கு இடையே காஷ்மீர் சிக்கிக்கொண்டது. ஷேக் அப்துல்லா அவ்வப்பொழுது விடுதலை, தனி தேசம் என்பது போன்ற கனவுகளை சொல்லவும், அது சார்ந்து செயல்படவும் செய்ததால் 'சிறையில் இருங்கள் ஐயா!' என்று அனுப்பி வைத்தது நேருவின் அரசு.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் ஆதர்ச நாயகனும் ஆன ஷேக் அப்துல்லா சிறைக்கு அனுப்பப்பட்ட சூழலில் மக்களிடையே நம்பிக்கையை பெற பல்வேறு யுக்திகளை மத்திய அரசு கையாண்டது. பக்ஷி குலாம் முகமது எனப்படும் ஷேக்கின் நம்பிக்கைக்குரியவராக இருந்த நபரையே தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஆக்கி, அவரை முதல்வராகவும் மத்திய அரசு ஆக்கியது. இன்னொரு பக்கம் ஜனநாயக தேசிய மாநாட்டுக் கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சி தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து பிளக்கப்பட்டு அரசின் ஆசியோடு ஆரம்பிக்கப்பட்டது. அதில் தன்னை இணைத்துக் கொண்டார் சயீத். ஆனால், சீக்கிரமே அதற்கு மூடுவிழா நடந்தேறியது.

கட்சி மூடப்பட்டதும் தன்னை தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைத்துக் கொண்ட சயீத்துக்கு அவர் சொந்த ஊரிலேயே சட்டசபைக்கு போட்டியிடும் வாய்ப்பு தரப்பட்டது. மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு, தேர்தலில் பரிபூரண முறைகேடு என்று காங்கிரஸ் அரசு செவ்வனே தன் பணியை செய்ய வெற்றி உறுதியானது. தேசிய மாநாடு கட்சி என்று பெயருக்கு இருந்த கட்சி விரைவில் காங்கிரஸ் கட்சியோடு இணைக்கப்பட்டது.

இருபது வருடங்களில் பலகாலம் சிறையிலேயே கழிக்க நேர்ந்த ஷேக் அப்துல்லா சிறையில் இருந்து வெளியே வந்த பொழுதெல்லாம் மக்கள் தங்களின் ஆதரவை அவருக்கு தந்தபடியே இருந்தார்கள். சயீத் இடைப்பட்ட காலத்தில் கேபினெட் அமைச்சராக ஆகியிருந்தார். இந்திராவும் ஷேக் அப்துல்லாவும் உடன்படிக்கை செய்துகொண்டு எழுபத்தி ஐந்தில் ஷேக் காங்கிரஸ் அரசின் தலைமை பொறுப்பை ஏற்றார். மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை சயீத் வசம் இந்திராவால் சேர்க்கப்பட்டது.

ஷேக்-இந்திரா உடன்படிக்கை வெகுகாலம் நீடிக்கவில்லை. ஷேக் தனித்து தன்னுடைய பாணியில் இயங்கினார். எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சியை இந்திரா இழந்திருந்தார். சயீத் இந்திராவுக்கு தூபம் போட ஆரம்பித்தார். காஷ்மீரை கைப்பற்றிவிடலாம் என அவர் சொன்னதை இந்திராவும் ஏற்றுக்கொண்டார். ஷேக் அப்துல்லாவுக்கு ஆதரவு தந்துகொண்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களோடு ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதால் தன்னையே முதல்வர் ஆக்கவேண்டும் என்று கேட்டார். ஷேக் சட்டென்று விழித்துக்கொண்டு சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த பரிந்துரைத்தார். ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, காஷ்மீரில் சுதந்திரமான தேர்தல் என்பது முதல்முறை சாத்தியமானது. ஷேக்கின் தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. சயீத் தன்னுடைய சொந்த தொகுதியிலேயே தோற்றுப்போனார்.

ஷேக் அப்துல்லாவை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்தார் சயீத். காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தினார். ஷேக் அப்துல்லாவின் ஊழல்கள் என்று சிவப்புப் புத்தகம் எல்லாம் வெளியிட்டார். மத்திய அரசிடம் இருந்து பலருக்கு சலுகைகள் பெற்றுத்தந்தார்.

ஷேக் எண்பத்தி இரண்டில் இறந்த பின்பு பரூக் அரசியல் களத்துக்கு வந்தார். தனித்து நின்றே வென்று காட்டுகிறேன் என்று முஷ்டி உயர்த்தினார். இந்திராவும், சயீதும் சுழன்று பிரசாரம் செய்தார்கள், எனினும், 46/76 என்று வென்று அசத்தியது பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி.

பரூக் மீது இந்திராவும் அவரின் தளபதியான சயீத்தும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறார், அரசுக்கு எதிரான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை வளர்க்கிறார் என்று பட்டியலை நீட்டினார்கள். போதாது என்று பதிமூன்று எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள். ஆட்சியை மாற்ற மறுத்த ஆளுநர் பி.கே.நேருவை சொன்னபடி கேட்கும் ஜக்மோகனைக் கொண்டு மாற்றினார்கள். பரூக்கின் ஆட்சி கொல்லைப்புறத்தின் வழியாக பறிக்கப்பட்டு அந்த பதிமூன்று பேரும் கேபினெட் அமைச்சர்கள் ஆக்கப்பட்டார்கள். சயீது ஆசிபெற்ற குலாம் முகமது ஷா முதல்வர் ஆகியிருந்தார்.

அடுத்து வந்த இடைத்தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த சயீத் தைரியமாக ரன்வீர்சிங்புராவில் போட்டியிட்டு வென்று காட்டினார். இப்படி பகுதி மாறி வென்ற முதல் மற்றும் கடைசி காஷ்மீர் அரசியல்வாதி அவரே!

ராஜீவ் காந்தி ஆசியோடு பாபர் மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டபொழுது இந்தியாவெங்கும் இந்து-முஸ்லீம் கலவரங்கள் வெடித்தன. காஷ்மீர் மட்டும் அமைதி காத்தது. சயீத்தின் மாவட்டமான அனந்த்நாக் மட்டும் ரத்தக்காடானது. உபயம் சயீத் என்று கிசுகிசுத்தார்கள். தானே முதல்வர் இருக்கையை பெற்றுவிடலாம் என்கிற நெடுநாள் கனவுக்காக அப்படிச் செய்தார் அவர் என்பது அவரின் நெருங்கிய சகாக்களின் வாக்குமூலம்.

இந்திரா மரணத்துக்குப் பிறகு பரூக்கின் நெருங்கிய நண்பரான ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். சயீத்தை அப்படியே டெல்லி ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கி, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆக்கினார். குலாம் முகமது ஷாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பரூக்குடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவரை முதல்வர் ஆக்கினார். பரூக், சயீத்தின் பரமவைரிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து, இவருக்கு எதிராக ஊழல் புகார்களை அடுக்கச் செய்தார். அடுத்து எண்பத்தி ஏழில் வந்த தேர்தலில் பல்லைக் கடித்துக் கொண்டு பரூக் வெற்றி பெற பிரசாரம் செய்தார்.

முஸ்லீம் ஐக்கிய முன்னணி என்கிற பெயரில் பல இளைஞர்கள், காஷ்மீரிய விடுதலை கோரும் அமைப்புகள் கைகோர்த்தன. தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கையில், காஷ்மீரில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று வர்ணிக்கின்ற அளவுக்கு முறைகேடுகளை அதிகார வர்க்கம் அரசின் வழிகாட்டுதலில் அரங்கேற்றியது. ஏமாற்றி பெருவெற்றி பெற்றது தேசிய மாநாட்டுக் கட்சி. தோற்றதாக சொல்லப்பட்ட பரூக் கட்சி வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு வென்றதாக அறிவிக்கப்பட்ட கேலிக்கூத்துகள் அரங்கேறின. காத்திருந்தார் சயீத்.

வி.பி.சிங் போபர்ஸ் குண்டை வீசி ராஜீவை குலைத்துப் போட்டார். அவரோடு ஜம்மென்று கைகோர்த்துக் கொண்டார் சயீத். உத்திர பிரதேசத்தில் போட்டியிட்டு வென்ற அவருக்கு தான் பா.ஜ.க.வின் ஆதரவைப் பெற்று ஆட்சி நடத்தினாலும், மதச்சார்பின்மை மிக்கவர் என்று காட்டும் வகையில் சயீத்தை உள்துறை அமைச்சராக ஆக்கினார் வி.பி.சிங். காஷ்மீர் ரத்தமயமாகும் கணத்தின் ஒத்திகை அங்கே ஆரம்பமானது.

ருபையா எனும் சயீத்தின் மகளை கடத்தினார்கள் காஷ்மீர் தீவிரவாதிகள். தேர்தலில் அநியாயமாக தோற்கடிக்கப்பட்ட வெறியில் பலரும் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். பரூக் தீவிரவாதிகள் கோரியபடி அவர்களின் சகாக்களை விடுவிக்க வேண்டியதில்லை என்று முதலில் அடம்பிடித்தாலும் பின் தீவிரவாதிகள் ஐந்து நாட்கள் இழுபறிக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். மத்திய அரசில் தான் எந்த தலையீட்டையும் செய்யவில்லை, அது பரூக்கின் முடிவு என்று சயீத் சொன்னாலும் துலத்தின் ‘காஷ்மீரிய வருடங்கள்’ புத்தகம் அது சயீத்தின் அழுத்தத்தாலே நடந்தது என்று சொல்கிறார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நிகழ்த்தலாம் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது அதைக் கடுமையாக எதிர்த்த சயீத், தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண் சிமிட்டினார். பரூக்கின் அரசை கவிழ்க்க முன்னர் அனுப்பப்பட்ட ஜக்மோகன் அழைக்கப்பட்டார். கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ராணுவம், தீவிரவாதிகளுக்கு இடையே அப்பாவி மக்கள் சிக்கிக்கொண்டு இறந்தார்கள். பல எதிர்ப்பாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தீவிரவாதிகள் காஷ்மீரிய பண்டிட்டுகளை கொன்று குவிக்க அவர்கள் காஷ்மீரை விட்டு அலறியடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் வெளியேறினார்கள். கொடிய AFSPA சட்டம் காஷ்மீருக்குள் முதன்முறையாக சயீத்தின் ஆசியோடு கொண்டுவரப்பட்டது. அதிகாரத்தை மீட்டுவிட்டதாக சயீத் முழங்கினார்.

வி.பி.சிங் ஆட்சி அத்வானியின் ரத யாத்திரை நிறுத்தப்பட்டதால் கவிழ சயீத் மீண்டும் பதவி இழந்தார். ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் காங்கிரசில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 96-ல் நடந்திருந்த நாடாளுமன்ற தேர்தல் காஷ்மீரில் அயோக்கியத்தனமானது என்று பரூக் கூக்குரலிட்டார். அடுத்து சட்டசபை தேர்தல் என்கிற சூழலில் வன்முறையால் மாநிலமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. சயீத் களம் புகுந்தார். எதிரிகளிடம் பேசினார், ‘பரூக் நீங்கள் வெல்வதற்கு நாங்கள் உறுதி!’ என்று புரியவைத்தார். தேசிய மாநாட்டுக் கட்சியை தேர்தலில் பங்கு பெற செய்து ஜனநாயகம் இன்னும் காஷ்மீரில் இருக்கிறது என்று உலகுக்கு சொன்னார். அவர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக பலரையும் பெயருக்கு என்று நிறுத்தினார் சயீத். தற்போதைய தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் இக்வானிஸ் என்கிற தீவிரவாதிகளை எதிர்க்கும் படையை உருவாக்கினார். தேர்தலை அவர்கள் கவனித்துக்கொண்டார்கள்.

தேர்தல் முடிந்ததும் பரூக் கட்சி எதிர்பார்த்தது போல வென்றது. ஆட்சிக்கு வந்த பரூக் தீவிரவாதத்தை கடுமையாக அடக்கினார். காஷ்மீருக்கு சுயாட்சி பற்றி ஆய்வு செய்ய ஒரு குழுவை வேறு அமைத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தலில் அனந்த்நாக் தொகுதியில் வென்ற சயீத் கட்சியின் தலைமைப் பொறுப்பு தன்வசம் வரும் என்று ஆசைப்பட்டார். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் பதவி மகள் வசம் இருப்பதால், தந்தைக்கு அப்பதவி இல்லை என்று கைவிரித்தது காங்கிரஸ். 1999-ல் கார்கில் போர் நடந்து முடிந்திருந்தது. அப்பொழுது இதுவரை தேசிய கட்சிகளின் மீது சவாரி செய்த சயீத் தனிக்கட்சி என்று முடிவு செய்தார்.

மக்கள் ஜனநாயக கட்சி உதயமானது. அவரின் மகள் மெஹ்பூபா களத்தில் புகுந்தார். கட்சியின் சின்னமாக ஐக்கிய முஸ்லீம் முன்னணி பயன்படுத்திய பேனா, குடுவையே எடுத்துக் கொள்ளப்பட்டது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் வீடுகளுக்கு போய் ஆதரவு சொல்வது, அவர்களின் குடும்பத்துக்கு உதவுவது என்று மக்கள் ஜனநாயக கட்சி அடித்து ஆடியது. இதற்குள் பரூக் அப்துல்லா அமைத்த மாநில சுயாட்சி குழு மத்திய அரசு பாதுகாப்பு, தகவல்தொடர்பு, வெளியுறவு தவிர மற்றவற்றை காஷ்மீர் அரசு வசமே ஒப்படைக்க வேண்டும் என்றதும் மத்திய அரசுக்கு வியர்த்தது.

2002 சட்டசபைத் தேர்தல் வந்தது. மெஹ்பூபா சூறாவளியாக சுழன்று வேலை பார்த்தார். காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்றும் முழங்காமல், தனி நாடு வேண்டும் என்றும் சொல்லாமல் ‘மென்மையான பிரிவினைவாதம்’ என்கிற புதிய பாணியை பின்பற்றினார்கள். சுயாட்சி தேவை, ஆனால், இந்தியாவோடு இருப்போம் என்று சொல்லி வாக்குகள் சேகரித்தார்கள். தேர்தல் முடிவுகள் வந்தன. பதினாறு இடங்களை துவங்கி மூன்று வருடங்களே ஆகியிருந்த மக்கள் ஜனநாயக கட்சி வென்றிருந்தது. முக்கியமாக பரமவைரி தேசிய மாநாட்டு கட்சி இருபத்தி எட்டு தொகுதிகளை மட்டும் வென்று மண்ணைக் கவ்வி இருந்தது. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சிக் கட்டிலை ஆளுக்கு மூன்றுவருடம் என்று பிரித்துக் கொண்டு அரியணை ஏறினார் முப்தி முகமது சயீத்.

முதல்வர் ஆனதும் அவரின் மென்மையான பிரிவினைவாதம் நல்ல பலனைத் தந்தது. தபால்காரர் பிரிவினைவாதிகளின் முகவரியை மறக்கிற அளவுக்கு அமைதி காஷ்மீரில் நிலவியது. சட்டம் ஒழுங்கு என்பது பெருமளவில் காக்கப்பட்டது. இரண்டு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. அவை சிறப்பாக செயல்படுவதை சயீத் உறுதி செய்தார். வெகுகாலமாக மறுக்கப்பட்டு இருந்த தொலைபேசி இணைப்பை காஷ்மீர்வாசிகளுக்கு மத்திய அரசிடம் பேசி கொண்டு வந்திருந்தார். தலைநகரில் இருந்த எண்ணற்ற ஆக்கிரமிப்புகள் அவரால் இரும்புக்கரம் கொண்டு நீக்கப்பட்டன.

காஷ்மீரின் இருபக்கமும் இருந்த மக்கள் தங்கள் உறவினர்களை பார்க்க முடியாமல் தவிக்கும் வலியை உணர்ந்திருந்த அவர் விசா எதுவும் இல்லாமல் ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று ஒரு பெர்மிட் மட்டும் இருந்தால் போதும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் காஷ்மீரிகள் இங்கே வரலாம் என்று அறிவித்து பல பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை உண்டாக்கினார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என்று சொன்ன அவர் வாஜ்பாய், சோனியா காந்தி, மோடி என்று இந்திய அரசியலின் அச்சுப்புள்ளிகளோடு இணைந்து பணியாற்ற தயங்கவே இல்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குலாம் நபி ஆசாத்துக்கு முதல்வர் பதவியை கைமாற்றினார். அமர்நாத் ஆலயத்துக்கு நூறு ஏக்கர் நிலம் சட்டத்தை மீறி கைமாற்றியதாக கிளம்பிய சிக்கலில் மாநிலமே கலவர பூமியானது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்கிறது காங்கிரஸ் அரசு என்று சொல்லி ஆதரவை விலக்கிக்கொண்டார் சயீத். அடுத்து வந்த தேர்தலில் இவரின் கட்சி அதிக தொகுதிகளில் வென்றாலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் வந்த பொழுது இந்த முறை பா.ஜ.க.வுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார். ‘வடதுருவமும், தென் தென்துருவமும் இணைந்தது போல’ என்று அவரே அதை வர்ணித்தார். சட்டப்பிரிவு 370 அப்படியே தொடரும் என்று உறுதிமொழி பெற்ற பின்பே அவர் ஆட்சியமைத்தார். அதற்கு பின் ஒரு கவனமான காய்நகர்த்தல் இருந்தது. ஜம்மு பகுதியில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றிருந்தது. காஷ்மீர் பகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி வென்றிருந்தது. முழுக்க பா.ஜ.க.வை நிராகரிப்பது ஒரு பகுதி மக்களை மேலும் அந்நியப்படுத்தும் என்று அவர் உணர்ந்திருந்தார். பீப் பிரச்சனை, மாநில-தேசியக் கொடி சிக்கல், படித்த பல இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுப்பது என்று பற்பல சிக்கல்கள் முளைத்த வண்ணம் இருந்த நிலையில் சயீத் கண்மூடிக்கொண்டினார்.

காஷ்மீரின் வலிகள், காயங்கள் ஆகியவற்றை ‘ஆற்றும் இதயத்தை’ தான் முதல்முறை ஆட்சி அமைத்த பொழுது தருவதாக சொன்ன அவர் அதை தன்னுடைய இறுதி பதினைந்து வருடங்களில் பெருமளவில் கடைபிடித்தார் என்றே சொல்லலாம். தாரா ஷூகோவை சயீத் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். காஷ்மீரில் தாரா ஷூகோ கட்டிய தோட்டத்திலேயே காஷ்மீரிக்கள் மதங்களைக் கடந்து இணைந்திருக்க முடியும் என்று நம்பிய அவர் அடக்கம் செய்யப்பட்டது பொருத்தமானது. அவருக்கு காஷ்மீரும், தேசமும் பிரியாவிடை கொடுக்கிறது.

-பூ.கோ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close