Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

9-ம் தேதி 9 மணி, 9 நிமிட அளவில்... ஜெயலலிதா ராசியை கையில் எடுக்கிறாரா விஜயகாந்த்?

மிழக அரசியலில், அண்மைக் காலமாக பரபரப்பை பற்ற வைத்துக் கொண்டிருப்பவர் தே.மு.தி.க.வின் தலைவரான விஜயகாந்த். இவருடைய கட்சியின் பொதுக்குழு வருகின்ற 9-ம் தேதி, காலை 9 மணிக்கு பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே, ஜே.கே.மகால் மண்டபத்தில் நடக்கிறது.

''பொதுக் குழுவுக்கு வருகிறவர்கள் சரியாக காலை 9 மணிக்குள் மண்டபத்துக்குள் வந்துவிட வேண்டும். தாமதமாக வந்தால் உள்ளே அனுமதி இல்லை.

பொதுக்குழு  மண்டபத்துக்கு வருவதற்கான அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க மாட்டோம். பொதுக்குழுவுக்கு வருகிறவர்கள் முன்னதாக அந்தந்த மாவட்டச்  செயலாளர்களை நேரில் சந்தித்து,  அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கட்சியினருக்கு தே.மு.தி.க. சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

"சுற்றறிக்கையில் மாவட்டச் செயலாளர்களுக்கு என்ன சொல்லப்பட்டுள்ளது?" - அவர்களிடமே பேசினோம்.

''கட்சிக்காரர்களை கையோடு கூட்டிக்கிட்டு வரணும் தெரிஞ்சுதா? சரியா, 9 மணி, 9 நிமிடத்துக்கு பொதுக்குழு தொடங்கிடும்... கேப்டன் மைக்கை பிடிச்சிடுவாரு, அவர் பேச ஆரம்பிச்ச பிறகு யாரும் உள்ளே வந்து கொண்டும், வெளியே போய் கொண்டும் இருக்கக் கூடாது.  பத்திரிகைகாரங்களை பகல் ஒரு மணிக்குதான் உள்ளே வரச்சொல்லி அழைப்பு கொடுத்திருக்காங்க. அதனால, எந்த பிரச்னையும் வர்றதுக்கு வாய்ப்பில்லை!" என்கிறார்கள்.

தே.மு.தி.க. தொடங்கியது முதல் கூட்டப்பட்ட அத்தனை பொதுக்குழுவிலும் இடம்பெற்றவர் எழும்பூர் பார்த்தசாரதி. இந்த முறை அவர், மத்திய புழல் சிறையில் இருக்கிறார்.

இது பற்றி, தே.மு.தி.க.வினரிடம் பேசியதில், ''பார்த்தசாரதி, கட்சியில் தலைமை நிலையச் செயலாளர், கொ.ப.செ., அமைப்புச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அவரை,  இந்த பொதுக்குழுவுக்கு எப்படியும் அழைத்து வந்துவிட வேண்டும் என்று கேப்டன், பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால், போலீஸ் தரப்பு ஒத்துழைப்பு கிடைக்காததால், பார்த்தசாரதிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. இன்றும் சனி, ஞாயிறு காரணம் காட்டி ஜாமீன் கிடைக்காமல் போகலாம் என்ற வருத்தம் கேப்டனுக்கு அதிகமாகவே இருக்கிறது" என்கின்றனர்.

'ஆமாம், அது என்ன ஒன்பது மணி, ஒன்பது நிமிடத்துக்கு பொதுக்குழு...? அதுவும் அமாவசை சென்டிமென்ட்டில்...? ஜெ.ஸ்டைல் போல இருக்கிறதே...' என்று சில தே.மு.தி.க.வினரிடம் கேட்டதற்கு, ''அதெல்லாம் தெரியலைங்க, ஆனா கேப்டனுக்கு இப்போ ஒன்பதுதான் ராசியான நம்பர்னு சொல்றாங்க!’’ என்கின்றனர்.

ஜெயலலிதா போல ஆட்சியைப் பிடிக்க இந்த ராசி சென்ட்டிமென்ட் மட்டும் கை கொடுக்குமா கேப்டனுக்கு..?

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ