Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கட்-அவுட் வைத்தால் கெட்-அவுட்... கும்பிடு போட்டால் க்ளோஸ்! - போயஸ் கார்டன் கெடுபிடி

தேர்தல் பிரசாரங்களுக்கு முன்னரே ’அடக்கி வாசிக்க’ச் சொல்லி தேர்தல் முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது அ.தி.மு.க. முகாம். ’இனி சாலையில் பேனர் வைத்தால் காலி, சாலையில் நின்று கும்பிடு போட்டால் கெட்-அவுட். இது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்’ என்று கார்டனில் இருந்து உத்தரவு பறந்திருக்கிறதாம்.

பொதுவாக போயஸ் கார்டன் தகவல்கள் அனைத்தும் ஹேஷ்யமாகவே இருக்குமே... இதுவும் அந்த வகையோ என்று தோன்றியது. ஆனால், விசாரித்தால் உண்மைதான் என்கிறார்கள் ஆணித்தரமாக. வேண்டுமானால் கட்சிப் புள்ளிகள் வாடிக்கையாக ஃப்ளெக்ஸ் அடிக்கும் நபர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்றார்கள். கேட்டுப் பார்த்தோம்...

"வழக்கமா நம்மகிட்ட கட்-அவுட், டிஜிட்டல் ஃப்ளெக்ஸ்னு ஆர்டர் குவியும். கடையே பத்துக்குப் பத்து சைஸ்தான். ஆனா, ரோட்ல ஏகப்பட்ட பேனர், கட்-அவுட்டுங்க சாய்ச்சு வைச்சிருப்போம். சின்ன கடைக்கே அப்படின்னா, பெரிய கடைகளுக்கு எவ்வளவு ஆர்டர் குவியும்னு பார்த்துக்குங்க. ஜனவரி பிறந்ததுமே அம்மா கட்சிக்காரங்க 60 மெகா பேனர்களுக்கு ஆர்டர் பண்ணி அட்வான்ஸ் கொடுத்தாங்க. ஆனா, என்னாச்சோ தெரியலை... அஞ்சாந் தேதி வாக்குல போன் போட்டு கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிட்டாங்க. கொஞ்ச பேர் மட்டும், 'அட்வான்ஸ் இருக்கட்டும். இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்’னுட்டாங்க. என்ன காரணம்னு தெரியலை... இனிமேதான் விசாரிக்கணும்' என்கின்றனர் பெரும் வருத்தத்துடன்.

ரத்தத்தின் ரத்தங்கள் என்ன சொல்கிறார்கள், போலீஸ் சைடில் பேனர்கள் குறித்து ஏதாவது சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்களை அவர்கள் வார்த்தையாகவே பதிவிடுகிறோம்...

"பொங்கலுக்கு 12,624 சிறப்பு பேருந்துகளை இயக்கவிருப்பதாக முதல்வர் அலுவலகத்திலிருந்தே அறிவித்தார்கள். அதே போல் பொங்கல் பையுடன் 100 ரூபாய் பணமும் கொடுத்தாங்க. அடுத்து நான்கைந்து நலத் திட்டங்களை கோட்டையில் இருந்து அறிவிச்சாங்க. அதில் சிலவற்றை முதல்வரே கோட்டையில் வைத்து அறிவித்தார். ஆனால், அந்த திட்டங்கள் தொடர்பாக போஸ்டர்கள், கட்-அவுட்கள் கோட்டையிலோ, கோட்டைக்குச் செல்லும் வழியிலோ வைக்கப்படவில்லை.

போக்குவரத்து துறை அமைச்சர் உள்பட யாரும் கட்-அவுட்டில் ஆர்வம் காட்டவில்லை. அரசு செய்திக் குறிப்போடு மட்டும் அவைகள் வெளி உலகத்துக்குச் சொல்லப்பட்டது.

திருவான்மியூர் பொதுக்குழுவின் போது வைக்கப்பட்ட பேனர் தொடர்பாக போடப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அதிகாரிகள் 'பர்மிஷன்' வழங்கியதிலேயே தில்லு முல்லு செய்திருந்ததைக் குறிப்பிட்டு,  அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே உத்தரவு பிறப்பித்தது. அதனால் ஃபிளெக்ஸ் விளம்பரங்கள் உருவாக்கும் 11 பேர் கொண்ட குழுக்களை எல்லாம் சில காலம் கமுக்கமாக இருக்குமாறு சொல்லியிருக்கிறார்கள்!’’ என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இன்னொரு தகவலும் உலாவுகிறது. "சென்னை மேயர் சைதை துரைசாமி, எம்.பி.க்கள் வா.மைத்ரேயன், ஜெ.ஜெயவர்த்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், அண்மையில் போஸ்டிங்குகளில் இருந்து கழற்றி விடப்பட்ட வி.பி.கலைராஜன், செந்தமிழன் மற்றும் விருகைரவி, நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, சிட்டி மா.செ.க்கள் வெற்றிவேல், கு.சீனிவாசன் போன்றோர் 'அம்மா' செல்லும் ரூட்டில் எங்கு நின்றால் 'மிகச்சரியாக' கண்ணில் படுவோம் என்பதை தெரிந்து வைத்து,  அந்தப் பாய்ன்ட்டில் வேறு யாரையும் நிற்க விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு தெளிவாக இருப்பவர்கள். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 'சோழா' பாலாஜி என்றுதான் பெயரே. சோழா ஓட்டல் அருகே அம்மா கார் வரும்போதும் போகும் போதும் அங்கே தவறாமல் இருப்பதால் அப்படி ஒரு பெயராம். ஆனால், இப்போது எல்லோரையும்  'சபாரி' போலீசார் கூப்பிட்டு, 'அம்மா, வர்ற ரூட்டுல யாரும் நிக்கக் கூடாது, கும்பிடக் கூடாது, கட்-அவுட், பேனர் என எது கண்ணில் பட்டாலும் அவ்வளவுதான்... கதை முடிஞ்சுது' என்று சொல்லிட்டார்களாம்.

"இதுபோல முன்னரே பொதுக்குழுவுக்கு காரில் வரவேண்டாம், வாசலில் முளைப்பாரியுடன் நின்று குலவை சத்தம் போடவேண்டாம் என  ஒவ்வொன்றுக்கும் ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லியிருந்தால், சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் சூழ்நிலைக்கு நாங்கள் ஏன் போகப் போகிறோம், இந்த கட்- அவுட்டுங்களை ஏன் வைக்கப் போகிறோம்...? ஏன் நீக்கினார்கள், எதற்கு நீக்கினார்கள் என்ற காரணமே தெரியாமல், யாரிடமும் அதுபற்றிக் கேட்கவும் முடியாமல் ஒரு சூழ்நிலை எங்க கட்சியில் இருக்கிறது" என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

பட்ட பிறகுதானே எல்லாம் புரிகிறது! 

- ந.பா.சேதுராமன்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close