Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கரும்பு விவசாயிகளிடம் கசப்பான அணுகுமுறையில் அ.தி.மு.க. அரசு!'

சென்னை: கரும்பு விவசாயிகளிடம் கசப்பான அணுகுமுறையில் அ.தி.மு.க. அரசு நடந்துகொள்வதாக கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப்பில் இருந்தாலே, அவர்களின் அலட்சியத்தாலும், தாமதத்தாலும் அடுக்கடுக்காகப் பிரச்னைகள் அணிவகுத்து வரும். அவற்றில் ஒன்றுதான், கரும்பு விவசாயிகளின் பிரச்னை. கரும்பு விவசாயிகளின் பிரச்னையை இந்த ஆட்சியினர் கண்ணெடுத்துப் பார்ப்பதுமில்லை; காது கொடுத்துக் கேட்பதுமில்லை; கவலை கொள்வதுமில்லை. நானும், மற்றக் கட்சியினரும் இதுபற்றிப் பல்வேறு அறிக்கைகள் கொடுத்து இடித்துரைத்தும் பயன் ஏற்பட்டதில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு விவசாயிகள் ஒவ்வோராண்டும் இவ்வாறு தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தக் குரல் கொடுப்பதும், போராடுவதும், சிறைக் கொட்டடிக்குச் செல்வதும் புதிதல்ல; வழக்கமாக நடைபெற்று வருகிறது. கரும்பு விவசாயிகளைப் பொறுத்தவரை, தி.மு.க. ஆட்சியில் எப்படிப்பட்ட ஆர்வத்தோடு ஆக்கபூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட்டது என்பதையும்; அ.தி.மு.க. ஆட்சியில்  எப்டிப்பட்ட அக்கறையற்ற தன்மையோடு பின்னடைவான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்பதையும்; இரண்டு ஆட்சிக் காலங்களிலும்  நடந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே அடிப்படை உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, கரும்புக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயக ரீதியிலான கலந்தாலோசனைக்கே இடமில்லாததால் முத்தரப்புக் கூட்டமே நடத்தப்படுவதில்லை. சர்வாதிகார ரீதியில், ஒருதலைப் பட்சமாகவே கரும்புக்குக் கொள்முதல் விலை   நிர்ணயம் செய்யப்படுகிறது.

அகில இந்திய அளவில் 2014-2015 ஆம் ஆண்டில் கரும்பு உற்பத்தி 245 லட்சம் டன்னிலிருந்து 282 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில்  கரும்பு உற்பத்தி 20 லட்சம் டன்னிலிருந்து 16 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கட்டுபடியாகக் கூடிய தொகை வழங்காததாலும், வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்குப் போதிய இழப்பீடு தராததாலும் கரும்புச் சாகுபடி இந்த அளவுக்குக் குறைந்துள்ளது. அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்காலும், கரும்பு விவசாயிகளிடம் அ.தி.மு.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினாலும், கரும்பு உற்பத்தி வெகுவாகக் குறைந்து விவசாயத்தைவிட்டு வெளியேறச் செய்து வருகிறது.

2015-2016 ஆம் ஆண்டு கரும்புப் பருவத்திற்கு மாநில அரசின் பரிந்துரை விலையை, அ.தி.மு.க. அரசு இப்போதாவது முத்தரப்புக் கூட்டம் நடத்தி, அறிவித்திட வேண்டுமென்றும்; தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய மொத்தப் பாக்கித் தொகையையும், மேலும் காலம் தாமதிக்காமல் வழங்கிடச் செய்திடத் தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன். மாறாக, ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, கரும்பு விவசாயிகளிடம் கடைப்பிடித்து வரும் கசப்பான அணுகுமுறையே மேலும் தொடருமேயானால், வருகின்ற 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சரியான பாடத்தை கரும்பு விவசாயிகளே கற்பிப்பார்கள் என்று இந்த அரசுக்கு எச்சரிக்கின்றேன்!" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ