Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றம்: கருணாநிதி

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள கரும்புகொள்முதல் விலை விவசாயிகளுக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றம் அளித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அ.தி.மு.க. வின் ஜெயலலிதா அரசைப் பொறுத்தவரையில்,  எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு உரிய காலத்தில் தக்க முறையில் நல்ல தீர்வு காணாமல் ஊறப் போட்டும், ஆறப்போட்டும் தாமதித்து விட்டு,   கடைசியில் நாம் நினைவூட்டிய பிறகு தான் அவர் அறிக்கை விடுவார் அல்லது அரை மனதோடு நடவடிக்கை எடுப்பதைப்போலக் காட்டிக் கொள்வார்.   உதாரணம் கூற வேண்டுமே யானால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் இல்லம் கடந்த மழை வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கிடப்பதையும்,  அதுபற்றி எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த திருமதி சரோஜா தேவி அறிக்கை விடுத்திருப்பதையும் எடுத்துக் காட்டி 3-1-2016 அன்று  நான் அறிக்கை  விடுத்தவுடன்,  அந்த இடத்தைப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக 4-1-2016 அன்று அறிக்கை விடுத்தார்.

 .

அது போலவே தான் கடந்த 10-1-2016 அன்று;   கவனிக்கப்படாமலேயே  இருந்து வரும் கரும்பு விவசாயிகளின் பிரச்சினை பற்றியும்,  கரும்பு விவசாயிகளிடம் அதிமுக அரசு காட்டி வரும் கசப்பு மிகுந்த அணுகு முறை பற்றியும்,  கரும்பு விலை பற்றி பொங்கலுக்கு முன்பாகவே அறிவிக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகச் சுட்டிக் காட்டியிருந்தேன்.  ஆனால் முன்பெல்லாம்  இது போன்ற பிரச்சினைகள் பற்றி எதிர்க் கட்சிகள் என்ன தான் குரல் எழுப்பினாலும், குண்டுமணி அளவும்  கண்டு கொள்ளாத முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பொதுத் தேர்தல் வரப் போகிறது என்றதும், திடீரென்று விழித்துக் கொண்டு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்து இன்று (12-1-2016) அறிவித்துள்ளார்.   ஆனால் அவசரக் கோலம், அள்ளித் தெளித்தது போல் என்பார்களே,  அது போல அந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக கரும்பு விவசாயி கள் சங்கப்  பிரதிநிதிகளே தெரிவித்திருக்கிறார்கள்.
 
தி.மு.கழக ஆட்சிக் காலத்தில்,  தமிழகத்தில் விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள்,  சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆகியோர் பங்கேற்கும்  முத்தரப்புக்  கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு,   அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும்  முடிவின்படி,  கரும்புக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே,  முத்தரப்புக்  கூட்டத்தையே நடத்தாமல்   சர்வாதிகார ரீதியில்,  ஒருதலைப் பட்சமாகவே கரும்புக்குக் கொள்முதல் விலை தொடர்ந்து   நிர்ணயம் செய்யப்பட்டு வந்ததைப் போலவே, இப்போதும் முதல் அமைச்சர் பெயரால் அறிவிப்பு வந்துள்ளது.  அதில் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2,850 என்றும்,  அந்தத் தொகை மத்திய அரசு நிர்ணயித்ததை விட  550 ரூபாய் அதிகம் என்றும் அறிக்கை வெளிவந்துள்ளது.  அதாவது இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றுவதைப் போல,  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 550 ரூபாய் அதிகமாக விலை நிர்ணயம் செய்வதைப் போலத் தெரிவித்திருக் கிறார்கள்.   கடந்த ஆண்டு கரும்புக்கு மாநில அரசு நிர்ணயம் செய்த விலை ரூ. 2,650 என்பது இந்த ஆண்டு, 2,850 ரூபாயாக அதாவது 200 ரூபாய் மட்டுமே கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.    அந்த 200 ரூபாயிலும் 100ரூபாய் போக்குவரத்துச் செலவுக்கானது.
 
2013-14ஆம் ஆண்டுக்கு  மத்திய அரசு 2,100 ரூபாய் என நிர்ணயித்த போது, அ.தி.மு.க. அரசு  550 ரூபாய் மட்டுமே சேர்த்து,  2,650 ரூபாய் எனப் பரிந்துரை விலையை நிர்ணயித்தது.     2014-15ஆம் ஆண்டுக்கு  மத்திய அரசு  2,200ரூபாய் என  முதலில் நிர்ணயித்ததுபோதும்,  அ.தி.மு.க. அரசு  முதல் ஆண்டு வழங்கிய அதே   2,650 ரூபாய் தான்  பரிந்துரை விலை என்று அறிவித்தது.  கடந்த இரண்டாண்டுகளாக 2,650ரூபாயாக, எவ்விதக் கூடுதல் தொகையுமின்றி ஒரே மாதிரியாக  இருந்த விலையைத் தான் இந்த ஆண்டு 2,850 ரூபாயாக   நிர்ணயித்திருக்கிறார்கள்.    இதைத் தான் சிலர் “புதிய மொந்தையில் பழைய கள்”  என்று வர்ணனை செய்திருப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

ஜெயலலிதாவின் அறிவிப்பு பற்றி “தி இந்து” ஆங்கில இதழ் வெளியிட்ட செய்தியில், அதாவது “கரும்புத் தொழிலே  நெருக்கடியான நிலையில் இருக்கும்போது, அரசின் அறிவிப்பினால் விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் மிகவும் அதிருப்தி”  “With the sugar industry in turmoil, both the farmers as well as the mills are highly disappointed” -என்று எழுதியிருக்கிறார்கள்.    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரன், மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் “கரும்புக்கான பரிந்துரை விலையை  தமிழக அரசு 4,000 ரூபாயாக அறிவிக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம்;  ஆனால் அரசு அறிவித்துள்ள விலை ஏமாற்றம் அளிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள். 
 
மேலும் தனியார் சர்க்கரை ஆலைகள்  கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை பற்றியும் முதலமைச்சரின் அறிவிப்பிலே எதுவுமே தெரிவிக்கவில்லை.   ஒட்டுமொத்தத்தில் கரும்பு விலை பற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு,  கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை எந்தவிதத்திலும் நிறைவு செய்வதாகவோ, ஓரளவுக்கேனும் நிம்மதி தருவதாகவோ இல்லை.    கரும்பு விவசாயிகள் அனைவரும் ஜெயலலிதாவின் அறிவிப்பைக் கண்டு    பெரிதும் ஏமாற்றத்திற்கும் விரக்திக்கும்  ஆளாகியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை!" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ