Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனசாட்சியை விற்ற ஜெயலலிதா:ராமதாஸ் காட்டம்!

சென்னை: 5 ஆண்டுகளில் மக்களுக்கு எதிரான செயல்களை மட்டும் செய்து விட்டு மக்களுக்காகவே தாம் உழைத்ததைப் போன்று போலித் தோற்றத்தை உருவாக்க ஜெயலலிதா முயல்வது தமிழக மக்களை அவமதிப்பது மட்டுமின்றி, ஏமாளிகள் ஆக்கும் செயல் ஆகும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மனசாட்சியை விற்றவர்களாலேயே இத்தகைய உண்மை கலப்பற்ற பொய்யை கூற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 99-ஆவது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், தமது அர்ப்பணிப்பு வாழ்வை மக்களுக்கு விளக்கிக் கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தமது கட்சியினரை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரது கட்சியினருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், 5 ஆண்டுகளில் மக்களுக்கு எதிரான செயல்களை மட்டும் செய்து விட்டு மக்களுக்காகவே தாம் உழைத்ததைப் போன்று போலித் தோற்றத்தை உருவாக்க ஜெயலலிதா முயல்வது தமிழக மக்களை அவமதிப்பது மட்டுமின்றி, ஏமாளிகள் ஆக்கும் செயல் ஆகும்.

‘‘ஒவ்வொரு குடும்பத்திற்கும், அக்குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசாங்கத்தின் உதவியும், சலுகையும் பல வகைகளில் கிடைத்திடும் வகையில் எனது அரசு திட்டங்களை தீட்டி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில்  இட்டு செல்கிறது’’ என்று அவர் கூறியுள்ளார். மனசாட்சியை விற்றவர்களாலேயே இத்தகைய உண்மை கலப்பற்ற பொய்யை கூற முடியும். ஜெயலலிதா அப்படிப்பட்டவர் என்பதால் தான் அவரால் ஏற்பட்ட வேதனைகளை சாதனைகளாக காட்டியிருக்கிறார்.

பொன் குடத்திற்கு பொட்டிட்டவாறு மக்களின் பேராதரவை தமது அரசு பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதைக் கூட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியவாறு என்று கூறியிருந்தால் அதுதான் பொருத்தமானதாக இருந்திருக்கும். மின்சாரம் வழங்காமலேயே கட்டணத்தை இருமுறை உயர்த்தியது, சாதனை படைக்காமலேயே ‘ஓராண்டு சாதனை -நூறாண்டு வளர்ச்சி’, ‘நான்காண்டு ஆட்சி-நாலாபுற வளர்ச்சி’ என மக்களின் வரிப்பணத்தில் விளம்பரங்களை வாரி இறைத்தது என மக்களுக்கு செய்த பாதகங்களையெல்லாம் சாதகங்களாக பிரச்சாரம் செய்வதற்கு முதல்வர் ஜெயலலிதா கூச்சப்படவேண்டும்.

ஆனால், இதற்கெல்லாம் ஜெயலலிதா கூச்சப்பட மாட்டார். அது அவரது இயல்பாகிவிட்டது. மக்களை மதிக்காத அவருக்கும் மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும். ஐந்தாண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யாத, மக்களை வதைப்பதை மட்டுமே முழு நேரப்பணியாகக் கொண்டிருந்த ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவதற்காக தமிழக மக்கள் உறுதியேற்று செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ