Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஜராக வந்த கருணாநிதி... பொதுக்கூட்டமான ஹைகோர்ட் வளாகம்!

துவரையில் இல்லாத ஒரு புது மாதிரியான அறிவிப்பை சில நாட்கள் முன்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்தார்.    "... தி.மு.க.வினர் யாரும் ஆடம்பரச் செலவுகளை செய்யக் கூடாது, கட்-அவுட், பேனர் போன்றவைகளை வைக்கக் கூடாது, எளிமையைப் பின்பற்றி மக்கள் பணியாற்றிட வேண்டும்... " என்று அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டிருந்தது.

அதற்கடுத்த நாளே, "ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகிறேன்" என்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார் கருணாநிதி.  சொன்னபடியே நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பின்னர், இந்த வழக்கை  மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

தி.மு.க. வினருக்கு உற்சாகத்தை வழங்கியதாக நம்பப்படும்  மு.க.ஸ்டாலினின்  'நமக்கு நாமே' சுற்றுப் பயணம், கொட்டித் தீர்த்த மழையில் கரைந்து போக, 'அதே உற்சாகத்தை திருப்பும் உத்தியாகவே இந்த கோர்ட் வருகை'  என, இந்நிகழ்வு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில், காலை பத்து மணிக்கே வந்து, நீதிபதியின் வருகைக்காக காத்திருந்தார் கருணாநிதி. கட்- அவுட், பேனர்களுக்குத்தான் தலைவர் தடை இருக்கிறது, கொடிகளுக்குமா தடை சொன்னார்? என்பது போல, எங்கோ ஒரு தொண்டர் பிடித்திருந்த கொடி மட்டுமே கண்ணில்பட்டது. கனிமொழியும், மு.க.ஸ்டாலினும் ஒரே காரில் வந்தனர். கருணாநிதியோடு லிப்ட்டில் உதவியாளரும், கனிமொழியும் கோர்ட்டுக்கு வந்தனர்.

ஹைகோர்ட்டின் ஆவின் கேட் பகுதியிலிருந்து, பி.ஜே. கோர்ட் வரை தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு ஆட்களே அதிகமாக கண்ணில்பட்டனர். ஆர்.எஸ்.பாரதி, மா.செ.க்கள், பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், எஸ்.சுதர்சனம், மா.சுப்பிரமணியன், ஆர்.டி சேகர், அட்வகேட் விங் இரா.கிரிராஜன் தமிழன் பிரசன்னா, ரவிச்சந்திரன், தாயகம் கவி உள்ளிட்ட டீம் கோர்ட் நடவடிக்கையில் கூடவே நிற்க, கோர்ட்டுக்கு வெளியே  மகளிரணி அப்பல்லோ குமரி, இலக்கிய அணி பூச்சி எஸ்.முருகன், பி.டி.பாண்டிச்செல்வம், ராயபுரம் மதிவாணன்... என்று ஆளாளுக்கு ஒரு கூட்டத்தை பக்காவாக ரெடிசெய்து. கூட்டி வந்திருந்தனர்.

மொத்தத்தில் காலை 10 டூ 11 வரை கட்-அவுட், பேனர், பட்டாசு வெடிச்சத்தம் இல்லாத பொதுக் கூட்டமாக ஹைகோர்ட்  வளாகம் மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

கோர்ட்டை விட்டு கருணாநிதி வெளியே வரும் வழியிலேயே, அவரிடம் சில கேள்விகளுக்காவது பதிலை வாங்கி விடவேண்டும் என்ற துடிப்பில் நூற்றுக் கணக்கில் குவிந்திருந்தனர் பத்திரிகையாளர்கள். ஆனால், அவர்களைவிட கூடுதலாக ஆயிரக்கணக்கில் தொண்டர்கள், செல்போன் கேமராவுடன் முண்டியடித்ததால், பத்திரிகையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஒரு செய்தி சேனலின் பெண் நிருபரை மிதித்து கீழே தள்ளிவிட்டு, சாரி என்றபடியே அங்கிருந்த மரங்களிலும், கோர்ட்டின் சன்னலோர கைப்பிடிகளிலும் தொங்கிக் கொண்டே,  'தலைவர் வாழ்க...!' என்று ஓயாது கோஷமிட்டனர்.

இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் ஒரு காவல் அதிகாரி கூட அந்த ஸ்பாட்டில் நின்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. கருணாநிதிக்கான சிறப்பு பாதுகாப்புப் படையினர்,  அந்த கூட்டத்தை முடிந்தவரை சமாளித்தனர். தொண்டர்கள் எல்லை மீறாததால், எந்த சலசலப்பும் பெரிதாய் அங்கே எழவில்லை.

அதே வேளையில், மாநிலத்தில் உள்ள உளவுப்பிரிவின் அத்தனை போலீசாரும் மீடியாக்களோடு இரண்டற கலந்து, மீடியாவைவிட கூடுதல் எண்ணிக்கையில் மிரட்டினர். கருணாநிதி மீடியாக்களைப் பார்த்ததும் அதிக மகிழ்ச்சியோடு கைவிரல்களை விரித்துக் காட்டி, தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். கட்சியினர் இதைப் பார்த்து ஆரவாரம் செய்தனர்.

அதே வேளையில் 2 நாட்களுக்கு முன்பாகவே மா.செ சேகர்பாபு ஐகோர்ட்டுக்கு வந்திருந்து கட்சியினர், கருணாநிதி குடும்பத்தினர் எங்கெங்கு பாதுகாப்பாக நிற்கவேண்டும் என்று ஏற்பாடு செய்துவிட்டு போனதாக தகவல்கள் கசிந்தது. அதை  உறுதிபடுத்துவதுபோல் இன்று கருணாநிதி கோர்ட்டில் நுழைந்ததுமே அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து, “ உங்களுக்கு என்ன இங்கு வேலை? பிரஸ் ரூம்தான் ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார்களே அங்கு போய் ஒதுங்க வேண்டியதுதானே?' என்று சத்தம்போட்டார். அவருக்கு ஆதரவாக சில வக்கீல்களும் வந்தனர். பின் கோர்ட் நிருபர்கள் திரண்டு இதை எதிர்த்தனர். பின்னர் நிலைமை சுமூகமானது.

கருணாநிதி அளித்த பேட்டி...

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது, ''நீதி எப்போதும் வெல்லும். நீதியை பின்பற்றி நாட்டு மக்களும் ஒன்று சேர வேண்டும். எந்த கருத்துக்களை தெரிவித்தாலும் தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்கிறது. உச்ச நீதிமன்றமும் தேவையில்லாமல் தமிழக அரசு அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக கண்டித்துள்ளது.

இதன் பிறகும் தொடர்ந்து அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்க மாட்டேன். வந்தால் ஏற்றுக்கொள்வேன். இந்த முடிவுக்கு நானும் கட்டுப்பட்டவன்" என்றார்.

ந.பா.சேதுராமன்
படங்கள்: பா.காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close