Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேட்பாளர்களுக்கு 4 வாக்குறுதி... சேலத்தில் அதிரடி தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!

'ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்குழு' என்ற ஒரு புதிய அமைப்பை ஊழலுக்கு எதிரான இயக்கம், ஐந்தாம் தூண், தமிழ் மீட்சி இயக்கம், இந்திய மக்கள் நல மன்றம், விழிகள் மகளிர் இயக்கம், சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ், மக்கள் மன்றம், சட்ட உரிமை இயக்கம் என சுமார் 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
 

இந்த கூட்டு நடவடிக்கைக்குழுவின் மூலம், கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் 4 நான்கு வாக்குறுதிகளை அளிக்க கேட்டுக் கொண்டுள்ளனர். அது வருமாறு:

* கடைநிலை ஊழியர் முதல் முதலமைச்சர் வரை ஊழல் செய்தால் விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்பவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் கொண்டுவர ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.

* அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட காலவரையறுக்குள் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து அந்த தொகையை நஷ்டஈடாக மனுதாருக்கு வழங்கவும் வகை செய்யும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வர ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.

* லஞ்ச, ஊழலில் கையும் களவுமாக பிடிபடும் நபரின் மீதான வழக்கை 6 மாதத்தில் நடத்தி முடித்து கடுமையான தண்டனை வழங்க உரிய சட்ட திருத்தத்தை கொண்டு வர ஆக்கபூர்வமாக செயல்படுவேன்.

* ஓட்டு வாங்க பணமோ, பொருட்களோ கொடுக்க மாட்டேன்.

இது வேட்பாளர்களுக்கு என்றால் பொதுமக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று முதலே துவங்கி விட்டனர்.

'சேலத்தில் உள்ள பொதுமக்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிப்பார்கள் என்று கூறி' துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வரும் ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்குழுவினர், சட்டமன்ற தேர்தலுக்கு தற்போது இருந்தே பிரசாரத்தை துவங்கி விட்டனர்.

இதுபற்றி கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி கூறுகையில், "வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் யாரிடமும் பணம் வாங்காமல் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், வாக்களித்த மக்களுக்கு வெற்றி பெற்ற வேட்பாளர் லஞ்ச ஊழலற்று நேர்மையாக தன்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த பிரசார பயணத்தை தொடங்கி இருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல கட்சிகளும் எங்களுடையை வாக்குறுதிகளை கடைப்பிடிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க., லோக் ஆயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டம் என்ற இரண்டு வாக்குறுதிகளை கடைப்பிடிப்பதாகவும், பா.ம.க.வினர் லோக் ஆயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டம், ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்ற 3 வாக்குறுதிகளையும் கடைப்பிடிப்பதாகவும் சொல்லி வருகிறார்கள். இப்படியே ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எங்களுடைய வாக்குறுதிகளை கடைப்பிடிப்பார்கள் என்றும், அதை கூடிய சீக்கிரத்தில் அறிவிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறோம்’’ என்றார்.

-வீ.கே.ரமேஷ்

படங்கள்:
எம்.விஜயகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ