Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெஹபூபா தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்... ஒமர் அப்துல்லா!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பா.ஜ.க.வுடனான மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) கூட்டணியை முறித்துக்கொண்டு, மீண்டும் தேர்தலைச் சந்திக்க மெஹபூபா முஃப்தி தயாராக வேண்டும் என்று ஒமர் அப்துல்லா கூறி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த முஃப்தி முகமது சயீது மறைவையடுத்து, பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தொடர, இரு தரப்பிலும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால்,   முஃப்தி முகமது சயீதின் மகளான மெஹபூபா முஃப்தி தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில்,  முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா,  ''பி.டி.பி. உயர்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, ஜம்மு-காஷ்மீரில் பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைத் தொடரும் முடிவை இரு கட்சிகளின் தலைவர்களும் முன்கூட்டியே எடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

பின்னர் ஏன், ஆட்சியமைப்பதில் விவரிக்க முடியாத அளவுக்கு இன்னும் காலதாமதம் நீடிக்கிறதென்று தெரியவில்லை. பா.ஜ.க.வும், பி.டி.பி.யும் அரங்கேற்றி வரும் அரசியல் நாடகங்களால், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலில் நிலையற்றதன்மை நிலவுகிறது. கடந்த 10 மாதத்தில், பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், இந்த மாநில மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தங்களை நம்பி வாக்களித்த மக்களை பி.டி.பி.யும், பா.ஜ.க.வும் இனியும் ஏமாற்றக் கூடாது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மெஹபூபா முஃப்தி தமது தலைமையில் உடனடியாக ஆட்சியை அமைத்து விரைந்து செயலாற்ற வேண்டும். இல்லையெனில், பா.ஜ.க.வுடனான தமது கட்சியின் கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்க அவர் தயாராக வேண்டும்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ