Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை அசெம்பளி ஸ்டார்ட்... பூரண மதுவிலக்கை அறிவிப்பாரா முதல்வர்?

நாளை தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மதுவிலக்கு வருகின்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அலார்ட் செய்திருக்கிறார்.

"பூரண மதுவிலக்குக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டம் ஓய்ந்திருந்தாலும் தமிழக மக்களின் பூரண மதுவிலக்குக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரும்புகிறார்கள். குறிப்பாக குடிப்பவர்களில் 50 சதவீதம் பேர் டாஸ்மாக் இல்லையென்றால் குடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். மது அருந்துவது தான் கொலைக் குற்றங்களுக்கும், சாலை விபத்துக்களுக்கும், விவாகரத்துக்களுக்கும் காரணமென்று தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பல உயிரழப்புகளுக்குக் காரணம் இது தான் என்பதுதான் பெரும்பாலோரின் கருத்து.

கிராமங்களில் ஒரு 10 பேர் குடித்தால், அவர்கள் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் வருவது மட்டுமின்றி, குடிக்காமல் இருக்கின்ற குடும்பங்களுடன் வம்பிழுப்பது அதிகமாக இருக்கிறது. அமைதியாக வாழ விரும்புபவர்கள் மற்றவர்களிடமிருந்து தப்பிக்க டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டுமென்று நினைக்கிறார்கள். தொழிற்சாலைகளுக்கு குடித்துவிட்டு வருகின்ற அலுவலர்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலகங்களில் ஒழுக்கக்கேடு உருவாகிறது. அரசு அலுவலங்களில் குடித்துவிட்டு வரும் அதிகாரிகளால் ஏற்படும் தொல்லைகள், ஏன் குடித்துவிட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் கூட உண்டு. இதையும் தாண்டி, முதல் நாள் இரவு அளவுக்கதிகமாக குடிப்பதால் அடுத்த நாள் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் வேலைத்திறன் குறைவதையும் அதிகமாகக் காண முடிகிறது. மொத்தத்தில் ஒவ்வொரு தமிழனும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்தில் பூரண மதுவிலக்கு தலையாய இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசுக்கு வருமானம் என்ற நோக்கத்தைவிட, மக்களின் ஆதரவு என்பதை அரசாங்கம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். நாளை துவங்க இருக்கின்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரில் மதுக்கடைகளைக் குறைப்பதற்கான, படிப்படியாக பூரண மதுவிலக்கிற்கான அறிவிப்புகளும் இடம்பெற வேண்டுமென்று தமிழக முதல்வரின் நலம் விரும்பும் மக்களே எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்களின் பூரண மதுவிலக்குக் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டும் என்று நம்புகிறோம்" என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ