Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரோஹித் வெமுலா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் மத்திய பல்கலை ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா கடந்த இரு நாட்களுக்கு தற்கொலை செய்து செய்து கொண்டது நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் வெமுலாவை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அவமதிப்புகளும், சீண்டல்களும் கண்டிக்கத்தக்கவை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி கற்பதற்காக எத்தனை தடைகளை தாண்டி வரவேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், சமூக நிலையிலும், பொருளாதார நிலையில் அடித்தட்டில் உள்ள குடும்பத்தில் பிறந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் அளவுக்கு உயர்ந்த வெமுலா, சில அநீதிகளை தட்டிக்கேட்டார் என்பதற்காகவே சக மாணவர்களுடன் விடுதி மற்றும் நூலகத்திலிருந்து நீக்கப்பட்டு நவீன தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டார்.

கடந்த 7 மாதங்களாக அவருக்கு ஆய்வு உதவித்தொகையும் மறுக்கப்பட்டிருக்கிறது. தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என்னென்ன... தாம் அடைந்த மன உளைச்சல் எத்தகையது? என்பதை  தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். வெமுலாவின் தற்கொலைக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும்.

ஆனால், அதுமட்டுமே போதுமானதாக இருக்காது. இத்தகைய நிகழ்வுகள் இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் நிலவுகின்றன என்பது பூனை கண்களை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு விட்டது என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் நிலவுகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) தலித் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை கண்டு மனம் வெதும்பினார். இதுகுறித்து விசாரிப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் தோரட் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த ஆணையிட்டார். எய்ம்சில் உணவுக்கூடம் தொடங்கி விளையாட்டு அரங்கம் வரை காணப்படும் பாகுபாடுகளை பட்டியலிட்ட அக்குழு, அவற்றை போக்குவதற்கான பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு வழங்கியிருந்தது. ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அந்த பரிந்துரைகளை அன்புமணிக்கு பின் வந்தவர்கள் செயல்படுத்தவில்லை.

பேராசிரியர் தோரட் குழுவின் அறிக்கை எய்ம்சுக்காக மட்டும் தயாரிக்கப்பட்டது என்ற போதிலும், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருத்தும். எனவே, தோரட் குழு பரிந்துரைகளையோ அல்லது புதிதாக வல்லுனர் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை பெற்றோ செயல்படுத்தி உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் சாதிய பாகுபாடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி,  வெமுலாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் கல்வி உதவித்தொகை திட்டத்தையும் அரசு தொடங்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close