Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலித் சமூகத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை!

சென்னை: நாடு முழுவதும் உள்ள தலித் சமுதாய மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு கொடுத்து அவர்களின் முன்னேற்றதிற்கு உதவிடவேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "
தலித் சமுதாயத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுத்து, அவர்களது முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும்.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றத்திற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அரசின் கடமை.

சாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டியது மத்திய, மாநில அரசின் பொறுப்பாகும். ஆனால் பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினர் மற்றும் தலித் சமுதாய மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் ஆண்டு அறிவியல் ஆய்வு மாணவரான ரோகித் வெமூலாவின் திடீர் மரணம் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது. இதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இச்சம்பவத்தில் நேரிடையாகத் தலையிட்டு வெளிப்படையான, உயர்மட்ட விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும். அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

மாணவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி தொடராமலும், நிகழாமலும் இருப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வற்ற, ஒருமைப்பாட்டுடன் கூடிய சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ