Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆறு அமைச்சர்கள் மாறியும் அவலங்கள் தீராத 'அமுதசுரபி' துறை!

தமிழகத்தின் அமுதசுரபி என்று அழைக்கப்படும் துறை வணிகவரித்துறை. இந்த துறை மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்து வருகிறது. ஆனால் அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிலுவையில் இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறைக்கு மட்டும் ஆறு அமைச்சர்கள், ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதன்காரணமாக ஒரு அமைச்சரிடம் கோரிக்கைகளை முறையிட்டு அவர் நடவடிக்கை எடுப்பதற்குள்,  அடுத்த அமைச்சர் பொறுப்பேற்றுவிடுவார். இதன் காரணமாகவே இந்தத்துறையில் ஊழியர்கள், அதிகாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இதுகுறித்து வணிகவரித்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், "வணிகவரித்துறையில் நிர்வாக வசதிக்காக நிரந்தர பணியமைப்பு, தற்காலிக பணியமைப்பு என்று இரண்டு விதமான பணியிடங்கள் உள்ளன. இவை இரண்டிலும் பணியாற்றுபவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் பதவி உயர்வில் மட்டும் தற்காலிக பணியமைப்பில் உள்ள ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. இதுகுறித்து நாங்கள் முறையிட்டதும், தற்காலிக பணியமைப்பும், நிரந்தர பணியமைப்பு  என்று தமிழக அரசு சமீபத்தில் ஒர் உத்தரவை பிறப்பித்தது.  ஆனால் அந்த உத்தரவும் இதுவரை அமல்படுத்தபடவில்லை.

இதையடுத்து பதவி உயர்வு உள்ளிட்ட ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க கடந்த 30.3.2015ல் நிதித்துறை செயலாளர் தலைமையில், பணியாளர் சீர்திருத்தத்துறை, சட்டத்துறை, வணிகவரித்துறை ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவும் அமைதியாகவே இருப்பதால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையே நிலவும் இந்த பதவி உயர்வு பிரச்னை காரணமாக மன உளைச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தள்ளப்படுகின்றனர். அதோடு வணிகவரி அலுவலர், உதவி கமிஷனர் பணியிடங்கள் 50 சதவிகிதம் காலியாக உள்ளன. இதன்காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சீனியாரிட்டி பிரச்னை தொடர்பாக பல அறவழியில் போராட்டம் நடத்தியும் அதற்கு அரசு தரப்பில் தீர்வு காணப்படவில்லை. எங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க இப்போது விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

வணிகவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த நிதியாண்டில் வணிகவரித்துறைக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரியை வசூலிக்க போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக  கடந்த 5 ஆண்டுகளில் 8 முறை அரசு வணிகவரித்துறை சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த துறைக்கு கோகுலஇந்திரா, சண்முகம், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், ரமணா, சம்பத் என ஆறு அமைச்சர்களும், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும்  மாற்றப்பட்டுள்ளதால் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது" என்றனர்.


-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ