Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களை இழிவாக பேசும் இளங்கோவன் மீது நடவடிக்கை இல்லையா?: கொதிக்கும் விஜயதாரணி!

சென்னை: பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசும் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் முறையிடுவேன் என்று ஆவேசமாக விஜயதாரணி கூறி உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணிக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. பதவியை பறிக்க வேண்டும் என்று பரஸ்பரம் இருவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் அனுப்பியதோடு நிற்காமல் டெல்லிக்கே சென்று முறையிட்டனர்.

ஆனால் ராகுல் காந்தியோ, இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் ஏதும் இல்லை. அவரது தலைமையில் தான் சட்டசபை தேர்தலை தமிழக காங்கிரஸ் சந்திக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜய தாரணி எம்.எல்.ஏ. நேற்று நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி அப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து விஜயதரணி கூறும்போது, ''எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற செயல். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை தவறான முடிவை எடுத்திருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் என்னை பெண் எம்.எல்.ஏ. என்றும் பாராமல் தரக்குறைவாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், இளங்கோவன் பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார். என்னை, தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருக்கும் வரையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது. டெல்லி சென்று சோனியாகாந்தி, ராகுல்காந்தியிடம் எதற்காக என்னை பதவி நீக்கம் செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டு முறையிடுவேன். அவர்களின் முடிவை பொறுத்துதான் என் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்." என்றார் ஆவேசமாக.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ