Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டசபை தேர்தல்: பாமக கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

சென்னை: பா.ம.க. சார்பில் அண்மையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அதில் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தமது கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பதையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தல் நேரத்தில் மிகச்சிறந்த வணிகமாக உருவெடுத்திருப்பது கருத்துக்கணிப்புதான். அறையில் அமர்ந்துகொண்டு ஒரு கட்சிக்கு சாதகமான புள்ளி விவரங்களை தொகுத்துத் தருவதற்கு கோடிகளில் பணம் கிடைப்பதால், கடந்த காலங்களில் அரைகுறையாக சேர்த்து வைத்திருந்த பெயரை முதலீடாக மாற்றி பலரும் கருத்துக்கணிப்பு வணிகத்தை தொடங்கியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கே அவமானம்.

லயோலா கல்லூரியில் பணியாற்றிய போது மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கி கருத்துக் கணிப்புகளை நடத்திவந்த பேராசிரியர் இராஜநாயகம், அதே அமைப்பின் சார்பில் கருத்துக்கணிப்பு கடைவிரித்து நடத்தி வருகிறார். அதன்மூலம் சென்னையில் இன்று அவர் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுகவுக்கும்(33.1%), அதிமுகவுக்கும்(33.3%) சம அளவு ஆதரவு காணப்படுவதாகவும், கூட்டணி யூகத்தின் அடிப்படையில் பார்த்தால் திமுக அணிக்கு(37.7%), அதிமுக அணியை (35.7%) விட அதிக ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பா.ம.க.வுக்கு குறைந்த அளவே செல்வாக்கு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முடிவுகளைப் பார்க்கும் போதே இந்த கருத்துக்கணிப்பு யாருக்காக, யாருடைய நிதி உதவியில் நடத்தப்பட்டிருக்கும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருக்கப்போவது ஊழல்தான் என 36.10 விழுக்காட்டினரும், மது பிரச்னைதான் என்று 23.40 விழுக்காட்டினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தம் 60% மக்களின் முக்கியப் பிரச்னையான இந்த இரு தீமைகளையும் கடந்த 50 ஆண்டுகளில் உரம் போட்டு வளர்த்தவை இரு திராவிடக் கட்சிகள்தான். அவ்வாறு இருக்கும்போது அக்கட்சிகளுக்கு 66.40% மக்களின் செல்வாக்கு இருப்பதாக தெரிவித்திருப்பதில் இருந்தே இந்த கருத்துக்கணிப்பு மோசடியானது என்பது தெளிவாகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையை அறிந்து கொள்வதற்காக பா.ம.க. சார்பில் அண்மையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பா.ம.க. 120 முதல் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு 62%  ஆதரவு உள்ளது. தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க. தான் என்று 73% மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதான் உண்மை. மோசடியாக கருத்துத் திணிப்புகளை வெளியிட்டு  மக்கள் மனநிலையை மாற்ற முடியாது. வரும் தேர்தலில் பாமக பெரும் வெற்றி பெறப்போவது உறுதி!" எனக் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்