Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவுடன் விஜயதாரணி திடீர் சந்திப்பு; அதிமுகவில் இணைய திட்டம்?

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான விஜயதாரணி இன்று திடீரென சந்தித்துப் பேசினார். இதனால் அவர் அதிமுகவில் இணையலாம் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி. அவர் ஆரம்பத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தார். இதனால் கட்சி மேலிடம் விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது.


இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு,  தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த ஆண்டு 19-ம் தேதி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இம்மோதலை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு விஜய தாரணி கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து இளங்கோவன், விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மறைந்த காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். விஜயதாரணியின் பதவி பறிப்பின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தனது பதவி பறிப்பு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயதாரணி, தாம் இதுகுறித்து டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து முறையிட உள்ளதாக கூறியிருந்தார். இதனிடையே விஜயதாரணி, ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என ஒரு தகவல் வெளியானது.

ஆனால் திடீர் திருப்பமாக சட்டப்பேரவை வளாகத்தில் இன்றைய கூட்டத்தொடர் முடிந்த பிறகு விஜயதாரணி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, ''முதல்வரிடம் தொகுதிப் பிரச்னைகள் குறித்துப் பேசினேன். என் பதவி பறிக்கப்பட்டது அநியாயம். இதை கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்'' என்றார்.

அவர் இவ்வாறு கூறியபோதிலும், அதிமுகவில் இணையும் நோக்கத்துடனேயே ஜெயலலிதாவை சந்தித்து இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ