Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வி.ஐ.பி. அந்தஸ்தை இழந்த ஆண்டிப்பட்டி தொகுதி!

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வி.ஐ.பி. அந்தஸ்தில் இருந்தது.

1980 தேர்தலில், நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். அப்போது அவர் வாங்கிய வாக்குகள் 44,490. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி வாங்கிய ஓட்டுகள் 16,508. 1984 தேர்தலில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர், தி.மு.க. வேட்பாளர் வல்லரசை 32 ஆயிரத்து 484 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

1989 தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அ.தி.மு.க. ஜானகி அணி சார்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி போட்டியிட்டார். இதில் அவர் தோற்றுப் போனதோடு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆசையன் 31,218 ஓட்டுக்களும்,  அ.தி.மு.க. ஜெ அணி சார்பில் போட்டியிட்ட வீ. பன்னீர்செல்வம் 26,997 ஓட்டுக்களும் வாங்கினார்கள்.  1991 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தவசியும், 1996 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆசையனும் வெற்றி பெற்றனர்.

2001 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற சூழல் எழுந்தது. ஆனாலும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதோடு மொத்தம் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததாலும், தண்டனை பெற்றவர் என்பதாலும் அவருடைய வேட்புமனு தள்ளுபடியானது. இதனால் அந்த தொகுதியில் டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்க. தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.

2002-ம் ஆண்டு டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதால், அவர் போட்டியிட வசதியாக தங்க. தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினமா செய்தார். 2002 ல் நடைபெற்ற இடைத் தேர்தலில், ஜெயலலிதா வென்றார். அதன்பிறகு 2006 தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார்.
 
2001 - 2006 அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஆண்டிபட்டி தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, ஆண்டிப்பட்டி - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெண்கள் தொழிற் பயிற்சி நிலையம், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், தங்கங்கம்மாள்புரம் கொட்டை முந்திரி பதப்படுத்தல், விற்பனை கூடம், உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. அடிக்கடி தொகுதி பக்கமும் ஜெயலலிதா தலை காட்டி வந்தார்.

அதாவது 2006 சட்டசபைத் தேர்தலை குறி வைத்து அங்கே பணிகள் நடைபெற்றன. 2006 தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா ஜெயித்தார். ஆனால் 2011 சட்டசபைத் தேர்தலில் ஶ்ரீரங்கம் தொகுதிக்கு ஜம்ப் ஆனார். அதற்கு காரணம் உண்டு.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. கம்பம் தொகுதியில் இருந்த பல பகுதிகள் ஆண்டிபட்டி தொகுதியில் சேர்க்கப்பட்டன. தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் உள்ள ஹைவேவிஸ், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட சில ஊர்கள் ஆண்டிப்பட்டி தொகுதியில் இணைக்கப்பட்டன.

2009 எம்.பி. தேர்தலில், தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை விட, அ.தி.மு.க. 5,708 வாக்குகள் மட்டும் அதிகம் பெற்றது. தே.மு.தி.க. வேட்பாளர் 11,566 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என நினைத்து ஶ்ரீரங்கம் தொகுதிக்கு மாறினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா தொகுதி மாறியபிறகு ஆண்டிப்பட்டியை யாரும் கண்டுகொள்வதில்லை.

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ