Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்தான் அடுத்த ச.ம.க. தலைவர்: எர்ணாவூர் நாராயணன் அதிரடி!

"ன்ன அண்ணாச்சி நம்மளப் பத்தி என்ன வெளியில பேசிக்கிடறாங்க?"  - கல, கல சிரிப்புடன் வரவேற்கிறார் எர்ணாவூர் ஏ.நாராயணன், எம்.எல்.ஏ.

 சமத்துவ மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், கட்சியின் முக்கிய வி.ஐ.பி.யுமான இவரைத்தான் நேற்று கட்சியை விட்டு நீக்குவதாக  அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நடிகர் சரத்குமார்.

  நீங்கள் தான் கட்சியின் முக்கிய தூண் என்று அடிக்கடி  சரத்குமார் சொல்வாரே, இப்போது திடீர் என்று உங்களுக்குள் என்ன ஆனது ?

அந்த தூணைத்தான் தள்ளி விட்டுட்டாரே, வேறென்னத்தை அண்ணாச்சி சொல்லச் சொல்றீங்க ...

நேற்று முன் தினம் வரையில் நீங்கள் தூண்தானே ?

இப்பவும் தொண்டர்கள் மத்தியில் நான் தூண்தான். அதை நாளைக்கு பார்க்கத்தான் போகிறீர்கள். போன வாரத்துல சமத்துவ மக்கள் கட்சியோட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராஜாவை, கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கண் முன்பாகவே  சிலர் அடித்துள்ளனர்.

அவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கும்படி தலைவர் கிட்டே பாதிக்கப்பட்டவங்க கோரிக்கை வைத்துள்ளனர். அவரோ, பிறகு பார்ப்போம், பார்ப்போம்னு சொல்லிட்டே வந்து கடைசியில நீங்க போலீசில் போய் புகாரைக் கொடுங்க, இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு கையை விரிச்சிட்டாரு. அந்தக் கோபத்துலதான்  பொதுச் செயலாளர் நாகராஜன், பாதிக்கப்பட்ட மாவட்டச் செயலாளரு ராஜான்னு மொத்தமா நிறையபேரு நேரா டெல்லிக்கே போய் பி.ஜே.பி. லீடருங்க முன்னால கட்சியில சேர்ந்துட்டாங்க.

இந்த விவகாரத்துல உங்களின் ரோல் என்ன ? இதற்கும் உங்களை நீக்கியதற்கும் என்ன சம்மந்தம் ?

நான்தானே  முக்கியமான தூண். கட்சியில துணைத் தலைவரும் நான்தானே... எங்கிட்டேயும் இந்த விவகாரம் வந்தது.  நான் உடனே, தலைவர் சரத்குமார்கிட்டே பேசினேன். அவரோ, இதற்கு பதிலைச் சொல்லாமல், வேற எதையெதையோ பேசிக்கிட்டு இருந்தாரு... ஏற்கனவே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி எனக்கு நெருக்கடி கொடுத்துக்கிட்டு இருக்கீங்க, அதுவும் அந்தம்மா (முதல்வர் ஜெயலலலிதா) வை கண்டிச்சு அறிக்கை விட்டுட்டு பிறகு ராஜினாமா செய்யணும்னு சொல்றீங்க. இப்ப என்னன்னா, நம்ம கட்சிக்காரங்க பிரச்னையை சொல்ல வந்தா அதைக் காது கொடுத்து கேட்காமல், எப்ப ராஜினாமா செய்யப் போறீங்கன்னு கேட்கறீங்க, உங்க செயல்பாடே எனக்கு சரியானதா மனசுக்கு படலை... நான் கட்சியில் இருந்து விலகிக்கறேன்னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். அதற்குப் பிறகுதான் அவர் ஆற அமர யோசிச்சுட்டு, என்னை கட்சியை விட்டு நீக்கிட்டதா அறிவிப்பை வெளியிடறாரு.

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன... தனிக்கட்சியா ?

எதுக்குன்னேன்?  சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பிக்கும்போது முறைப்படி போஸ்டிங் போட்டு உள்ளே வந்த அத்தனை மாவட்டச் செயலாளர்களும் நம்ம கூடத்தானே இருக்காங்க, நாம் ஏன் சமத்துவக் கட்சிக்கு தலைவராகக் கூடாது,  இனிமேல் நாமதான்..அவரு (சரத்குமார்) அடிக்கடி யார் யாரையோ கட்சியில அந்தப் பொறுப்பு, இந்தப் பொறுப்புன்னு கொடுத்து போஸ்டிங் போடுவாரு, பிறகு அவரே நீக்கி விட்டுடுவாரு.  அந்த ஆட்களும்,  இப்போது அவரை விட்டு விலகிட்டாங்க. தமிழ் நாட்டில் அவருக்கென்று ஆளே கிடையாதுங்க அண்ணாச்சி... பிடுங்குறதுல மட்டும் குறியா இருந்தால் யார்தான் கூட நிப்பாங்க, நீங்களே சொல்லுங்க பார்ப்போம். நடிகர் என்பதால் அவர் போகிற இடங்களில் கொஞ்சம் கூட்டம் சேர்றது வாஸ்தவம்தான். ஆனா, அந்த சேர்ற கூட்டத்தை வைத்துக் கொண்டு கட்சியை நடத்திடலாம்னு கணக்குப் போட்டால் அது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவை ஏன் கண்டித்து அறிக்கை தர்ச் சொல்கிறார் ?

நடிகர் சங்கத் தேர்தலில் இவரோட தோல்விக்கு அம்மாதான் காரணம் என்று முழுமையா  இவர் நம்பறார். அந்தம்மாதான் திட்டம் போட்டு கவுத்துட்டாங்க என்பது இவருடைய நிலை. இதற்கு என்னை பகடைக்காயாக பயன்படச் சொன்னால், அது எப்படி சரியாக வரும். பார்ப்போம் பதினோரு மணிக்கு மாவட்டச் செயலாளருங்களை வரச் சொல்லிக் கூட்டம் கூட்டியிருக்காராம். நான் மூணு மணிக்கு பிரஸ்சை பாக்கறேன். பாத்துடுவோம் ஒரு கை... என்ன சொல்றீங்க, அண்ணாச்சி ?

மீண்டும் அட்டகாசமாக ஒரு சிரிப்பு...நடக்கட்டும்... டும்.. டும்..!

-ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ