Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எங்கள் கட்சியை உடைக்க திட்டமிட்ட சதி...!' - குமுறும் சரத்குமார்!

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியை உடைக்க திட்டமிட்ட சதி நடந்துள்ளது என்று சரத்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்த அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் டெல்லி சென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலருடன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன், கட்சிக்கு புறம்பாக செயல்பட்டதால் நீக்கப்பட்டு உள்ளார்.

அ.தி.மு.க.வுக்கு எதிராக விமர்சனம் செய்ய சொல்லி வற்புறுத்தியதாக கூறுவது அப்பட்டமான பொய். நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் செய்துவந்த பணிகளை நான் எப்போதும் தடுத்தது இல்லை. இதற்கு மேலும் பதில் அளிப்பதற்கு அவர் ஒன்றும் பெரிய மனிதர் அல்ல. கட்சியைவிட்டு பிரிந்து சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

இதையெல்லாம் பார்க்கும்போது, ச.ம.க.வை உடைக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது தெரிகிறது. அதனால், புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கும், சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்கும் இன்றைய அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர்களை தவிர அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், புது உத்வேகம் அளிக்கும் வகையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளோம்.

சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில், அனைத்து தொண்டர்களுமே முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ ஆகும் வகையில் வளர்க்கப்படும் கட்சியாகும். நான்கரை ஆண்டுகளாக கட்சியில் இருந்துவிட்டு பிரிந்து சென்றவர்கள், கட்சிக்காக என்ன செய்தோம் என்பதை மனசாட்சியுடன் நினைத்து பார்க்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி, அ.தி.மு.க. அணியிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. தேர்தல் தொடர்பாக எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கி உள்ளது. அதனால், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ