Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் தலைக்கு ராமதாஸ் ரூ.2 கோடி நிர்ணயம்: வேல்முருகன் பகீர்!

கடலூர்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன்னை கொலை செய்ய  திட்டமிட்டுள்ளார் என்று, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், கீழக்கொல்லை கிராமத்தில், கடந்த 23-ம் தேதி இரவு பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் மற்றும் அவர் குடும்பத்தார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு,  வேல்முருகனின் சகோதரர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனால் இரண்டு கட்சியினரும் கடையடைப்பு, மறியல் போராட்டம் என்று இறங்க, மாவட்டத்தில் பரபரப்பும், பதட்டமும் தொத்திக் கொண்டிருக்கிறது.
 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், "நாங்கள் பா.ம.க.விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியதிலிருந்து, எங்கள் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத பா.ம.க.வை சேர்ந்த ராமதாஸ், அன்புமணி, குரு, ஜி.கே.மணி ஆகியோர்  என்னை கொலை செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதற்காக அக்கட்சியினரை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். நான் அரியலூரில் கட்சி கூட்டம் நடத்த சென்ற போது குரு, அவர் வீட்டு முன்பு எங்கள் காரை வழிமறித்து, நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்தார். அதில் அதிர்ஷ்டவசமாக உதவியாளர், கட்சிக்காரர்கள் எல்லோரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினோம்.

அதேபோல் தர்மபுரியில் கட்சி கூட்டம் நடத்த சென்றபோது,  ஜி.கே.மணி பெங்களூருவில் இருந்து கூலிப்படையை வரவழைத்து, காவல் நிலையத்தின் முன்பாகவே என்னை கொலை செய்ய முயற்சித்தார். இதுகுறித்து ஏற்கனவே காவல்துறையில் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது அ.தி.மு.க. கூட்டணியோடு வரும் சட்டமன்ற தேர்தலை நாங்கள் சந்திப்பதால் கட்டாயம் பா.ம.க. பலமிழந்து போய்விடும். அதனால், இனிமேல் என்னை விட்டு வைத்தால் பா.ம.க. கூடாரம் காலியாகிவிடும் என்று தீர்மானித்த சேர்ந்த ராமதாஸ், அன்புமணி, குரு, ஜி.கே.மணி ஆகியோர்,  கூலிப்படை மூலம் என்னை கொலை செய்ய திட்டமிட்டு, என் தலைக்கு இரண்டு கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளேன். முதல்வரும் எனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் ராமதாஸிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேடிக்கை காட்டுகின்றனர்" என்றார்.

- க.பூபாலன்

படம்: எஸ்.தேவராஜன்
    

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ