Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரத்குமாரை ஏன் அ.தி.மு.க தலைமைக்குப் பிடிக்காமல் போனது?

''பொன்பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே.. என் மனதை நானறிவேன், என் உறவை நான் மறவேன், எது ஆன போதிலும் ஆகட்டுமே ! நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்'' என்ற எம்.ஜி.ஆர்.படத்தின் பாடல் வரிகளுடன் பிரமாண்ட போஸ்டர்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர் நாடார் பேரவையினரும், சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான எம்.எல்.ஏ. நாராயணன் அணியைச் சேர்ந்தவர்களும்.
 
இந்தப் பாடல் வரிகளோடு அந்த போஸ்டர் முடிந்தால் பரவாயில்லை. அதற்கு அடுத்த வரியாக, 'நாடார் பேரவையினரும், சமத்துவ சொந்தங்களும் என்றென்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை மீண்டும் முதல்வராக்க அயராது உழைப்போம்' என்று முடிகிறது அந்த போஸ்டர்.
 
இறுதியில், ‘என்றும் நன்றி மறவாத நெஞ்சத்துடன் எர்ணாவூர் ஏ.நாராயணன், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர்’ என்று குறிப்பிட்டு ஜெயலலிதாவின் படமும், எம்.எல்.ஏ. நாராயணனின்  கும்பிட்ட படமும் இடம் பெற்றுள்ளது.
 
இதையே இன்று பிரஸ் மீட்டுக்குப் போவதற்கு முன் ஊடகங்களில் விளம்பரமாகவும் கொடுத்துள்ளனர் நாராயணனின் ஆதரவாளர்கள்.
 
 இது குறித்து  எம்.எல்.ஏ. நாராயணனிடமே கேட்டேன்

அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டீர்களா?
 
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... என் மனதில் இருப்பதையெல்லாம் அப்படியே சொல்வது போல் அந்தப் பாடல் அமைந்திருந்தது. அதைத்தான் விளம்பரமாக கொடுத்தேன்."

அம்மாவை மீண்டும் முதல்வராக்க உழைப்போம் என்றல்லவா, அந்த விளம்பரத்திலேயே வருகிறது?
 
"அண்ணாச்சி... என் மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டேன், அவ்வளவுதான்."
 
சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்வீர்களா?
 
"அதில் என்ன சந்தேகம்...? நான் இரட்டை இலைச் சின்னத்தில்தானே நின்று போட்டியிட்டு ஜெயித்தேன். அந்த பொறுப்பிலிருந்து என்னை விலகச் சொல்ல சரத்குமாருக்கு எந்த உரிமையும் கிடையாது. சமத்துவக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்தே என்னை அவரால் நீக்க முடியாதபோது இது எப்படி சாத்தியப்படும்?" என ஏக கெத்துடன் சொல்லி முடித்தார் நாராயணன். 
 
அ.தி.மு.கவில் ஐக்கியமாவாரா..?
 
இந்நிலையில், மேற்படி விளம்பரமும் ஜெயலலிதாவுக்கு ஆதரவான பேச்சும் எர்ணாவூர்  நாராயணன் அ.தி.மு.கவில் ஐக்கியமாக இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளதால், இதுகுறித்து
அவரது ஆதரவாளர்களிடம் பேசினேன்.
 
 
’’அம்மா கூட்டணியில இருந்துகொண்டே சரத் அண்ணாச்சி குமரி அனந்தன் மேற்கொண்ட மது ஒழிப்புக்கு எதிரான நடைபயண பிரசார தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், அதே  நிகழ்ச்சியில்  தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கையைக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 
நடிகர் சங்கத் தேர்தலில், வெற்றிக்கு ஆதரவு கேட்டுதான் அம்மாவைப் போய்ப் பார்த்தார். ஆனால், அவங்க இவரை பொருட்படுத்தலை. விஷால் ஜெயிச்சாரு. அதற்கடுத்து வந்த நாட்களில் இவர் செயல்பாடு மாறிவிட்டது. அ.தி.மு.க.வை சிதைக்க மறைமுகமாக செயல்பட்டார்.  நாராயணன் அண்ணாச்சி அதற்கு உடன்படலை. அதனால் பழிபோட ஆரம்பிச்சார். இப்ப நாராயணன் அண்ணாச்சி, சி.எம். அம்மாகிட்டே பேசிட்டாரு. அம்மா சொல்றதை வைத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.
 
சமத்துவ மக்கள் கட்சியை அம்மா கட்சியோடு இணைப்பதா, அல்லது தனித்து பலமாக செயல்படுவதான்னு அண்ணாச்சி நாளை அல்லது நாளை மறுநாள் முடிவெடுத்திடுவார்!’’ என்கின்றனர்.
 
அ.தி.மு.கவிலிருந்து ஒருபுறம் பழ. கருப்பையா வெளியேற, மறுபுறம் எர்ணாவூர் நாராயணன் கதவைத் தட்ட... அதகளமாகுது தமிழக அரசியல் களம்!
 
- ந.பா.சேதுராமன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ