Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழ.கருப்பையா புகார்களுக்கு ஜெ.விளக்கமளிக்க வேண்டும்: ராமதாஸ்!

சென்னை: அதிமுக அரசு மீது பழ.கருப்பையா தெரிவித்துள்ள புகார்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" அ.தி.மு.க.வைச் சேர்ந்த சென்னை துறைமுகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக ஆட்சி நிர்வாகம் மீதும், கட்சி செயல்பாடுகள் குறித்தும்  மிகக்கடுமையான குற்றச்சாற்றுகளை முன்வைத்திருக்கிறார். கட்சி மீதான புகார்கள் அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என்பதால் அதுபற்றி விமர்சிக்க முடியாது. அதேநேரத்தில் அரசு நிர்வாகம் மீது கருப்பையா கூறியுள்ள புகார்களை புறந்தள்ளிவிட முடியாது. புகார் கூறிய பழ.கருப்பையா இல்லம் அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டிருப்பதில் இருந்தே புகார்களில் உண்மை இருப்பதை உணர முடிகிறது.

தமிழக அரசு மீது பழ. கருப்பையா கூறியுள்ள குற்றச்சாற்றுகள் மிகவும் கடுமையானவை. ‘‘தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஊழல் செய்கிறார்கள். கிரானைட் கொள்ளை பி.ஆர்.பழனிச்சாமி, தாதுமணல் கொள்ளை வைகுந்தராஜன் ஆகியோரின் பைகளுக்குள் தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் அடங்கிக் கிடக்கிறார்கள். துறைமுகம் தொகுதிக்குட்பட்ட உருது முஸ்லீம் பள்ளி விளையாட்டுத்திடல், வெலிங்டன் ரீடிங் ரூம் ஆகியவற்றை அமைச்சர்களின் ஆதரவுடன் சிலர் வளைத்துப் போட்டுள்ளனர்.  உள்ளாட்சி உறுப்பினர்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழலில் திளைக்கிறார்கள்.’’ என்று பழ. கருப்பையா அடுக்கடுக்காக குற்றஞ்சாற்றி உள்ளார். இவை எதுவும் புதிதல்ல. கடந்த பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து கூறிவரும் புகார்கள் தான் இவை. ஆனால், இப்போது அமைச்சர்களுடன் நெருங்கிப் பழகிய, ஆளுங்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஒருவரே இப்புகார்களை கூறியிருப்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன.

அமைச்சர்களும், அதிகாரிகளும் பி.ஆர்.பி., வி.வைகுந்தராஜன் ஆகியோரின் பைகளில்  அடங்கிக் கிடக்கிறார்கள் என்ற புகாரை அலட்சியம் செய்யமுடியாது. தென் மாவட்ட கடற்கரைகளில் தாதுமணல் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இதுகுறித்து அரசுக்கு  ஆதாரங்களுடன் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக கூடங்குளம் அணு உலையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படக்கூடாது என்ற விதியை மீறி, அணு உலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் 756 ஏக்கர் நிலத்தை வைகுந்த ராஜனின் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியிருக்கிறது. மேலும். இதற்கான விதிவிலக்கையும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் பேசி அரசே வாங்கி கொடுத்திருக்கிறது.

அதேபோல், ஆட்சிக்கு வந்த வேகத்தில் சகாயம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கிரானைட் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், கிரானைட் கொள்ளையர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. தொடக்கத்தில் வேகம் காட்டிய  அரசு, இந்த விஷயத்தில் எதிர்பார்த்த ஏதோ ஒன்று நடந்து விட்டதால் வழக்குகளை குழிதோண்டி புதைக்க முயல்கிறது. கிரானைட் கொள்ளை குறித்து  சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சகாயம் குழு பரிந்துரை செய்து 3 மாதங்களாகிவிட்ட போதிலும், அதை ஏற்க அரசு மறுக்கிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக  அரசும் பி.ஆர்.பி மற்றும் வைகுந்தராஜன் கைகளில் உள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு கிடையாது.

அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட்டணி அமைத்து ஊழல் செய்வதற்கு இன்னொரு உதாரணம் தமிழ்நாடு மின்சார வாரிய செயல்பாடுகள் ஆகும். தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் யூனிட்டுக்கு 20 பைசா முதல் ரூ.2.00 வரை அமைச்சருக்கும், அதில் 10% தொகை அதிகாரிகளுக்கும்  லஞ்சமாக தரப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவது, சூரிய ஒளி மின்நிலையம் அமைப்பதற்கான மின்சார கொள்முதல் உடன்பாடு செய்து கொள்வது ஆகியவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடுவது உண்மை.

அதேபோல், பான்பராக் உள்ளிட்ட போதைப்பாக்குகளும், கஞ்சாவும் சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து தான் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அனுப்பப்படுகிறது என்ற குற்றச்சாற்றையும் மறுக்க முடியாது. போதைப்பாக்குகளுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் அனைத்துப் பெட்டிக்கடைகளிலும் தாராளமாக விற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி,  போதைப்பாக்குகளை விற்பனை செய்வதற்காக யார் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இதற்கு காரணம் போதைப்பாக்கு நிறுவனங்கள் ஆட்சியாளர்களுக்கு அளிக்கும் லஞ்சம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மொத்தத்தில், தமிழக அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் புற்றுநோய் போல பரவியிருக்கிறது.

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், அதற்காக அவர் கூறிய குற்றச்சாற்றுக்களை ஒதுக்கிவிட முடியாது. எனவே, கருப்பையா கூறியுள்ள குற்றச்சாற்றுகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும்; இந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ