Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல்: காவல் துறை வேடிக்கை பார்ப்பதாக கருணாநிதி கண்டனம்!

சென்னை: பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" அ.தி.மு.க. விலிருந்து  நீக்கப்பட்ட  சட்டப் பேரவை  உறுப்பினர் பழ. கருப்பையா அவர்களின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்த  வந்த அ.தி.மு.க. வினர்,  அவருடைய வீட்டின் மீது  நேற்று நள்ளிரவு  கற்களை வீசிக் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.  நல்ல வேளையாக பழ. கருப்பையா  வீட்டின் கதவைத் திறக்காததால் உயிர் தப்பியுள்ளார்.  அதனால் கோபம் அடைந்து  வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்திருந்த அவருடைய காரை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளார்கள்.
 
“துக்ளக்”  பத்திரிகையின் ஆண்டு விழாவில்,  தமிழகத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து  கொள்ளை அடிப்பதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதற்காக பழ. கருப்பையா அ.தி.மு.க. விலிருந்து  நீக்கப்பட்டார்.   கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும்,  பழ. கருப்பையா தொலைக்காட்சிகள் மூலமாகவும், பேட்டிகள் வாயிலாகவும்,  ஆளுங்கட்சியின் அவலங்களையும் முறைகேடுகளையும்  தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தார்.   அதன் விளைவாக அவரது வீடு நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளது.
 
அதைப் பற்றி பழ. கருப்பையா  அளித்துள்ள பேட்டியில் இரவு 11 மணியளவில்,  “திடும்” என்று அவருடைய வீட்டுக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதாகவும்,  அவரது வீட்டில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்த போது,  “டேய் வாடா வெளியே,  எங்கேடா அவன்,  வரச் சொல்டா  வெளியே”  என்று கெட்ட வார்த்தைகள் எவ்வளவு உண்டோ, அத்தனை வார்த்தைகளாலும் அங்கே வந்திருந்தவர்கள் அர்ச்சித்ததாகவும் கூறி இருக்கிறார்.   மேலும் அவர் தனது பேட்டியில்,  வந்தவர்களில் ஒருவன்  தான் அ.தி.மு.க.  அலுவலகத்திலிருந்து வருவதாகவும், தனது பெயர் ராதாகிருஷ்ணன் என்று கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். இன்று காலையில் அவர் வேலூரில் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருந்ததாகவும்,  ஆனால் யாரோ வேலூர் தமிழ்ச் சங்கத்தினரைத்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பழ. கருப்பையாவை நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது என்றும், "வந்தால் அவன் உயிரோடு போக முடியாது" என்று மிரட்டி  எச்சரித்ததாகவும்,  நிகழ்ச்சிக்கு வர வேண்டாமென்று கூறியதாகவும்  தனது பேட்டியிலே தெரிவித்திருக்கிறார்.
 
அந்தக் கட்சியில் வேரூன்றிவிட்ட வன்முறைக்  கலாச்சாரப்படி  இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடுமென்று  கடந்த மூன்று  நாட்களாக எதிர்பார்த்திருந்ததாகவும், அதுதான் நடைபெற்றதாகவும் கூறியிருக்கிறார்.  இறுதியாக அவர், தனக்கு அதிமுக வின் கட்சிச் செயல்பாடு பிடிக்காததால்  கட்சியிலிருந்து வெளியேறியதாகவும்,  அதற்காக ஆள் வைத்துத் தாக்குவதாகவும்,  சுதந்திர நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு உரிமையில்லையா என்றும்,  தான் ஒரு கருத்தைத் தெரிவித்தால், அது பிடிக்கவில்லை என்றால் ஆட்சேபணை  தெரிவிக்க வேண்டியதுதானே என்றும்,  ஆட்களை அனுப்பி நள்ளிரவில்  தாக்குவதும், கொலை செய்ய முயல்வதும்  என்ன அரசியல் நாகரீகம் என்றும், தன்னை அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யக் கூடுமென்றும் தெரிவித்திருக்கிறார்.
 
அ.தி.மு.க. வின் கலாச்சாரம் என்றாலே,  தமிழகத்தின் முதல் குடி மகனாக இருந்த  ஆளுநர்  சென்னா ரெட்டி அவர்களே,  திண்டிவனம் அருகே தாக்கப்பட்டதும்  - இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த  டி.என்.சேஷன் அவர்கள் சென்னை   விமான நிலையத்திலும்  அவர் தங்கியிருந்த  விடுதியிலும் தாக்கப்பட்டதும் - சுப்பிரமணியம் சுவாமி அவர்கள்  உயர் நீதிமன்றத்திலேயே  தாக்கப்பட்டதும் - மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள்  திருச்சி விமான நிலையத்திலிருந்து  காரைக்குடி சென்று கொண்டிருந்த வழியில் தாக்கப்பட்டதும் - எம்.ஜி.ஆர்.  நினைவு இல்லப் பொறுப்பாளராக  பணியாற்றி வந்த  முத்து  மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டதும் - முன்னாள் ஐ.ஏ.எஸ்.   அதிகாரி, சந்திரலேகா மீது  ஆசிட் பாட்டில் வீசி, அவரது முகத்தை நாசம் செய்ததும் - எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் தலைவராக இருந்த எம்.ஜி. சுகுமார்,  மற்றும் சிலர்  ராமனாதபுரம் மாவட்டத்தில் தாக்கப்பட்டதும் - முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.  ராதா தாக்கப்பட்டதும் - அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த அனந்தகிருஷ்ணன்  வீட்டில் புகுந்து  அவரைத் தாக்கியதும் - மூத்த வழக்கறிஞர்  விஜயன்  வழக்கிற்காகப்  புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்  கோடம்பாக்கத்தில்  தாக்கப்பட்டதும் -  தி.மு.கழக  மூத்த வழக்கறிஞர்  சண்முகசுந்தரம், உடல் முழுவதும் அரிவாளால் வெட்டப்பட்டு, பிழைப்பாரோ மாட்டாரோ என்ற அளவில்  ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும்  - வளர்ப்பு மகன் சுதாகரன் மீதே  ஹெராயின் வைத்திருந்ததாக  வழக்கு  போட்டதும் -       அ.தி.மு.க. ஆட்சியிலே  ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த  தூத்துக்குடி  ரமேஷ்,  மதுராந்தகம் சொக்கலிங்கம்,  உப்பிலியாபுரம்  ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கப்பட்டதும்  -      கும்முடிப்பூண்டி தொகுதியிலே  அவர்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த  சுதர்சனம்  கொல்லப்பட்டதும் - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  பீட்டர் அல்போன்ஸ்  சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு  வெளியிலேயே  தாக்கப்பட்டதும் - ஜெயலலிதாவுக்கு எதிராக நீதி மன்றம் தீர்ப்பளித்த நிலையில்,  கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள்  கல்விச் சுற்றுலா சென்ற நேரத்தில்,  அவர்கள் சென்ற  பேருந்துக்கு அ.தி.மு.க. வினர்  தீ வைத்து,  அதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த மூன்று மாணவியர் தீயில் கருகி மாண்டதும்  - இவைகள் எல்லாம்  பொது மக்களுடைய  நினைவுக்கு வரத் தானே செய்யும்!
 
இப்படிப்பட்ட வன்முறையும், அநாகரீகமும் கலந்த நிகழ்ச்சிகளைப்  பார்க்கும்போது,   நாம் ஜனநாயக  நாட்டில் தான் வாழ்கிறோமா,  கடும் புலி  இருக்கும் காட்டில் வாழ்கிறோமா, காவல் துறை என்னதான் செய்கிறது, கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா,  தனி மனிதச்சுதந்திரத்தின் மீது ஏன் இந்தப் பாய்ச்சல்  என்ற கேள்விகள் தான் எழுகின்றன.    ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆளுங்கட்சியைப் பற்றியோ;    பேசினாலோ, எழுதினாலோ அவர்களைத் தாக்குவது,  அவதுhறு வழக்குகளைப் போடுவது என்ற பாணியில் அரசியல் நடப்பது பொது அமைதிக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும்.  இப்படிப்பட்ட போக்கினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக  வன்மையாகக் கண்டிக்கின்றேன்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ