Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முஃப்தியின் லட்சியங்களுக்கு பா.ஜ.க. உறுதியளித்தால் ஆட்சி... மெஹபூபா!

ஸ்ரீநகர்: மாநிலத்தில் அமைதி, சமமான வளர்ச்சி உள்ளிட்ட முஃப்தியின் லட்சியக் கனவுகளை நிறைவேற்றித் தருவதாக பா.ஜ.க. உறுதியளித்தால் மட்டுமே ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மெஹபூபா திட்டவட்டமாக கூறியதாக, பி.டி.பி. கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின், பா.ஜ.க.வுடன் இணைந்து மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) கூட்டணி ஆட்சி அமைத்தது. இதை தொடர்ந்து பி.டி.பி. கட்சியின் மூத்த தலைவரான முஃப்தி முகமது சயீது, மாநில முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் 7-ம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக முஃப்தி கடந்த காலமானார். இதையடுத்து அந்த மாநிலத்தில் ஜனவரி 8-ம் தேதி முதல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த முடிவை எடுப்பதற்கு, முஃப்தியின் மகளான மெஹபூபாவுக்கு முழு அதிகாரத்தை அக்கட்சியினர் வழங்கியிருந்தனர். ஆனாலும், ஒரு சில விவகாரங்களில் பா.ஜ.க.வுக்கும், பி.டி.பி.க்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது0.

இந்நிலையில், புதிய ஆட்சி அமைப்பது குறித்து மெஹபூபா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், மண்டலத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வெளிப்படையாக கூறிய எம்.பி.தாரிக் கர்ரா இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பா.ஜ.க.வுடனான கூட்டணியின் நோக்கம் அரசு அமைப்பது மட்டுமல்ல, காஷ்மீரை நீண்டகாலப் பிரச்னைகளில் இருந்து விடுவிப்பதும் ஆகும்.

மாநிலத்தில் அமைதி, சமமான வளர்ச்சி உள்ளிட்ட முஃப்தியின் லட்சியக் கனவுகளை நிறைவேற்றித் தருவதாக பா.ஜ.க. உறுதியளித்தால் மட்டுமே ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மெஹபூபா கூறினார்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ