Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிட்நைட் 'மசாலா டிவி' கொண்டு வந்ததவர் மோடி... கிச்சு கிச்சு மூட்டிய நாயுடு!

புதுச்சேரி: மிட்நைட் 'மசாலா டிவி' சேனல் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பேசினார்.

புதுச்சேரி வந்த மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான வெங்கைய்யா நாயுடு முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தினை திறந்து வைத்தார். அதன் பின்னர் ரோஸ்மா திருமண நிலையத்தில் நடந்த அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர், “இன்றைய இளைய சமுதாயம் முழுவதும் மோடியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா என எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் மோடி... மோடி... என்று புகழ்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வெறும் முன்று கோடி பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், நமது மோடி ஆட்சியில் இருபது கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல அவர்கள் ஆட்சியில் தூர்தர்ஷன் போன்ற ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. அதுவும் பிளாக் அண்ட் வொயிட் டிவி. ஆனால், தற்போது மோடி ஆட்சியில் 'வி டிவி', 'மா டிவி', 'உதயா டிவி', 'சூரியா டிவி', 'மிட் நைட் மசாலா டிவி' உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும், காங்கிரஸ் ஆசியில் ஒரு வழி சாலைகளுக்கே வழி இல்லாமல் இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில், நான்கு வழி, ஆறு வழி என தேசிய நெடுஞ்சாலைகள் நீண்டு கொண்டே இருக்கின்றது. கிராமப் புறங்களிலும்  அதிகமாக சாலை வசதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் அனைத்திலுமே ஊழல்தான். எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. பூமியின் மீது மணல் கொள்ளையில் ஊழல், பூமிக்கு அடியில் நிலக்கரி ஊழல், ஆகாயத்தில் ஹெலிகாப்டர், விமான ஊழல், அதற்கும் மேலே வின் வெளியில் 2ஜி ஊழல். இப்படி ஆகாயத்திலுருந்து பூமிக்கடியில் வரை ஊழல்தான். ஆனால் பா.ஜ.க.வின் இந்த 18 மாத ஆட்சியில் ஊழல் புகார்களே கிடையாது. நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டும் இல்லை வெளியேற வேண்டும். நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்குவது ஜனநாயக விரோதம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்வியை காங்கிரஸ் கட்சியால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அரசை செயல்படவிடாமல் தடுத்தும், நாடாளுமன்றத்தை முடக்கியும், சட்டங்களை இயற்ற விடாமலும் தடுத்து வருகிறது. மோடியின் நல்லாட்சியில் ஏழைகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காப்பீடு திட்டங்கள், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் போன்றவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

மேலும், அவர்கள் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு மாநில அரசுகளைக் கலைத்திருக்கின்றனர். 465 அவசரச் சட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால் மோடி அரசு அருணாசலப்பிரேதச அரசை கலைத்தற்கும், இரண்டு அவசரச் சட்டங்களை கொண்டு வந்ததற்கும் எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன. ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவன் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனை தரும் ஒன்றாகும். ஆனால் அதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. இதே பல்கலைகைக் கழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது தலித் மாணவர்கள் உட்பட பத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

அப்போது இவர்கள் எங்கு சென்றார்கள்? ஏன் பிரச்னையை எழுப்பவில்லை? சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் செந்தில்குமார் தற்கொலையிலும், விழுப்புரத்தில் மூன்று மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை தொடர்பாகவோ ஏன் காங்கிரஸ் குரல் தரவில்லை. அக்கட்சியின் தலைவர்களும் வந்து ஆறுதல்கூட கூறவில்லை. நாட்டின் நலனைக் கருதியே மோடியும், பா.ஜ.க.வும் செயலாற்றி வருகிறது.

காங்கிரஸில் தாத்தா, பாட்டி, அம்மா, மகன், பேரன் என மன்னராட்சி நடைபெறுகிறது. ஆனால் பா.ஜ.கா.வில் சாதாரன ஒரு டீ விற்பவர் கூட இந்திய நாட்டின் பிரதமாராகிவிட முடியும். அனைத்து கட்சிகளும் பல கட்சிகளாக உடைந்து கிடக்கிறது. காங்கிரசில் ஜனதா காங்கிரஸ், யூத் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், மூப்பனார் காங்கிரஸ், ரங்கசாமி காங்கிரஸ்... தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே கட்சி நமது பா.ஜ.க. கட்சி. அதனால் நமது ஆட்சியின் சாதனைகளை சொல்லி இளைஞர்களையும், மகளிர்களையும் அதிகமாக கட்சியில் சேர்க்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜி.எஸ்.டி. மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் தடுகிறது. மோடிக்கு மக்கள் அளித்த ஆட்சிப் பொறுப்பை நிறைவேற்றவிடாமல் தடுக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் தவறான பிரசாரத்தை மக்கள் துணையோடு முறியடிப்போம். புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவே பா.ஜ.க. விரும்புகிறது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்” என்றார்.

- ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ