Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தி.மு.க., அ.தி.மு.க. கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்வோம்!'

கடலூர்: நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., அ.தி.மு.க. கொள்ளையடித்த சொத்துக்கள் பறிமுதல் செய்வோம் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்று அரசியல் எழுச்சி பயணம் என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கடலூரில் இன்று தொடங்கினர். இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் பெரும் திரளாக திரண்டிருந்த இந்த தேர்தல் பிரசாரத்தில், தொண்டர்கள் மத்தியில் அவர்கள் பேசும்போது, ''அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் அதிகரித்திருக்கும் ஊழல் மற்றும் மதுவிற்பனையால் தமிழகம் சீரழிந்துவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு ஆட்சிகளிலும் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்" என்றனர்.

மேலும், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி மீதான ஊழல் புகார் வழக்கையும் குறிப்பிட்ட மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள், மாற்று அரசியலுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தினர். மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

மேலும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைபாளர் வைகோ கூறும்போது, ''மக்களுக்காகவும், ஊழலை ஒழிக்கவும் உருவாக்கப்பட்டது மக்கள் நலக்கூட்டணி. 6 மாத காலமாக துல்லியமாக திட்டமிட்டு களம் இறங்கி உள்ளோம். ஒன்றாக இருக்க மாட்டோம் என்றவர்களின் எண்ணத்தை பொய்யாக்கினோம். அனைத்து தமிழர்களின் நலனை முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி பயணிக்கும். மற்ற கட்சிகளின் பலம் அவர்களிடம் இருக்கும் பணம் மட்டுமே. பணமில்லாத வெற்றியை நாங்கள் சாதித்து காட்டுவோம். நாங்கள் நால்வரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ