Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மாவை விஞ்சிய அமைச்சரின் விளம்பரம்...தஞ்சை திகுதிகு!

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி,  அதிமுக நிர்வாகிகள்  பிளக்ஸை வைப்பார்கள். அதை மிஞ்சும் அளவுக்கு தஞ்சாவூரில் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் வைத்து அதிமுவினரையே வியக்க வைத்துள்ளனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

வரும் 24-ம் தேதி,  அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள். அதற்காக சில மாதங்களுக்கு முன்பே அந்த கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுக்க, சுவர் விளம்பரம் மற்றும் பிளக்ஸ் வைத்தும் அவரை வாழ்த்தி வருகின்றனர். மேலும் இலவச திருமணங்களை நடத்தி வைப்பது,  தண்ணீர் பந்தல் திறப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என அமைச்சர்களும் வெகு விமர்சையாக 'அம்மா'வின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவார்கள்.

வழக்கமாக ஜெயலலிதா பிறந்த நாளுக்கு சும்மாவே ஆடும் அதிமுக நிர்வாகிகள்,  சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் சும்மா இருப்பார்களா...? ஒவ்வொருவரும் சீட் வாங்க வேண்டி அம்மாவை வாழ்த்தி பிளக்ஸ் வைத்து தெறிக்க விட்டுள்ளனர். ஆனால் அதை மிஞ்சும் அளவுக்கு,  அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு வரவேற்பு நிகழ்ச்சிக்கு,  தஞ்சாவூர் முழுவதும் அமைச்சரையும் மணமக்களையும் வாழ்த்தி மெகா சைஸ் பிளக்ஸ் வைத்துள்ளனர் அவரின் ஆதரவாளர்கள்.

இது குறித்து அதிமுகவினர் சிலரிடம் பேசினோம்.

“வரும் 10-ம் தேதி சென்னையில்,  அம்மா தலைமையில் அமைச்சர் வைத்திலிங்கம் மகள், ஆர்.காமராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இல்ல திருமணம் நடக்க இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதமே நடக்க வேண்டிய இந்த திருமணங்கள்,  சென்னை கனமழையால் தள்ளிப்போய் இப்போது நடக்க இருக்கிறது. அமைச்சர் வைத்திலிங்கம் வரும் 12-ம் தேதி,  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகிறார்.

முக்கிய அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் வர இருக்கின்றனர். அதற்காக பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குந்தவை நாச்சியார் கல்லூரியில் இருந்து விழா நடக்கும் மைதானம் வரையிலும்,  மற்றும் நகரம் முழுவதும் பிளக்ஸ் வைத்துள்ளனர்.

நால்வர் அணியில் முக்கியமானவரான வைத்திலிங்கம் இல்ல நிகழ்ச்சியை வாழ்த்தி,  அம்மா பிறந்த நாளை மிஞ்சும் அளவுக்கு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது அதிமுகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள்,  கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு இதுபோல் பிளக்ஸ் வைத்து வரவேற்றார்கள். அதன் பிறகு அவருடைய சபாநாயகர் மற்றும் கட்சி பதவி பறிக்கப்பட்டது. இன்னும் அவரால் இழந்த செல்வாக்கை அடைய முடியவில்லை. இப்போ வைத்திலிங்கம் கதி என்னாகுமோ?” என்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

வைத்திலிங்கம் ஆதரவாளர்களோ, “அமைச்சர் சில வருடங்களுக்கு முன் தன்னுடைய மகன் திருமணத்தை அம்மா தலைமையில் நடத்தினார். அப்போது இதுபோல் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவில்லை. அதற்காகத்தான் மகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சியை கொஞ்சம் விமர்சையாக நடத்துகிறார். நிர்வாகிகள் அவர்மீதுள்ள அன்பில் தனிப்பட்ட ஆர்வத்தில் மணமக்களை வாழ்த்தி பிளக்ஸ் வைத்துள்ளனர். இதையெல்லாம் அம்மா கண்டுகொள்ளமாட்டார்” என முடித்துக் கொண்டனர்.

- கே.குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ