Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழ.கருப்பையாவை அம்மா நீக்கியது இதற்காகத்தான்- அதிமுகவினரின் அட்ராசக்க விளக்கம்!

"ழ.கருப்பையா அதிமுகவில் நன்கு சம்பாதித்தவர். கட்சியில் அமைச்சர் பதவி கேட்கிறார், கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்கிறார். அம்மா சொல்வதை கேட்க மறுக்கிறார். அதனால்தான் அவரை கட்சியை விட்டு நீக்கினார் அம்மா" என்று அதிமுகவினர் புது விளக்கம் அளித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில்,  அ.தி.மு.க பாசறை எழுச்சி தின பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 868 குடும்பத்திற்கு துணிகள், 10 பேர்களுக்கு தையல் மிஷின்கள், 1068 நாற்காலிகள் அமைக்கபட்டிருந்தது. 1568 சாப்பாட்டு பொட்டலங்கள், 368 பேர்களுக்கு நோட்டு, பேனாக்கள் மாற்றுதிறனாளிகளுக்கு வண்டி என எங்கு பார்த்தாலும் 68 -ஐ குறிக்கும் வகையில்தான் பரிசு  பொருட்களை கொடுத்துள்ளார் பாசறை மாவட்ட செயலாளர் வீரபோகம் கோகுல்.

அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவருமான தாமரை ராஜேந்திரன், சிறப்பு விருந்தினர் கழக அமைப்புச் செயலாளர் பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளர் பு.தா.இளங்கோவன், முன்னாள் எம்.பி இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன், கவிதா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

முன்னாள் எம்.பி இளவரசன் பேசுகையில், " பழ.கருப்பையாவை நீக்கியும், அதிமுகவினரே தாக்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் தம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்றனர். அவரை நீக்கியதற்கு காரணத்தை சொல்ல நினைக்கிறேன். அம்மா எந்த ஒரு காரியம் செய்தாலும் அதில் பல அர்த்தம் இருக்கும். தொண்டர்களாகிய நீங்கள் பதவி கிடைத்துவிடுமா என்று இரவு, பகலாக கடினமாக கட்சிக்கு உழைக்கிறீர்கள். ஆனால் பழ.கருப்பையா மாற்று கட்சியிலிருந்து வந்தவர். நன்கு பேசத்தெரிந்தவர். அதிமுகவில்  நன்கு சம்பாதித்தவர். கட்சியில் அமைச்சர் பதவி கேட்கிறார், கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்கிறார். அம்மா சொல்வதை கேட்க மறுக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அம்மா பற்றியும், அம்மாவின் ஆட்சியை பற்றியும் கட்சியை வெளிப்படையாக விமர்சித்து பேசுகிறார். கட்சி விரோத போக்கில் செயல்படுவதால் அவரை கட்சியை விட்டு நீக்கினார் அம்மா. அவர்கள் வீட்டில் கல்லடி படுகிறது. கல் எறிந்தவர்களை ஒரு மணி நேரத்தில் கைது செய்கிறது காவல்துறை.  ஒருவர் அதிமுக, ஒருவர் திமுக, ஒருவர் காங்கிரஸ். இவர்கள் எல்லோரும் குடிகாரர்கள். கருப்பையாவே ஒத்துக் கொள்கிறார் அம்மா செய்திருக்கமாட்டார் என்று. ஆனால் கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் அனைத்து தலைவர்களும் எப்படி தாக்கலாம் என்று கொந்தளிக்கிறார்கள்.
 

ஐந்து கட்சிக்கு சென்ற வந்த ஓடுகாலிதான் பழ.கருப்பையா. நான் கேட்கிறேன், பழ.கருப்பையா செம்மொழி மாநாட்டை விமர்சித்தார் என்ற ஒரே காரணத்தால் சென்னை திமுக மாவட்டச் செயலாளர், பகுதி செயலாளர், கவுன்சிலர்கள் அவரது வீட்டிற்கு சென்று அவரது வாயில் கம்பை வைத்து குத்தி, அவரது உதட்டை பிளேடால்  அறுத்தார்கள். இதற்கு அவர்கள் மீது வழக்கு போட்டார்களா, எனக்கு கலைஞர் எப்போதுமே தலைவர் என்று சொன்னார். குஷ்புவை அவர்கள் செருப்பால் அடிக்கவில்லையா, பெண்கள் இருக்கும் நேரத்தில் பி.ஜே.பி அலுவலகத்தில் திமுகவினர் தாக்கினார்களே, அவர்களை கண்டிக்கவில்லையே. இந்த நாட்டில் அராஜகத்தை உருவாக்கியவர் கருணாநிதிதான். எதையாவது சொல்லி மக்கள் மனதை மாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறார். மக்கள் மீண்டும் குடும்ப அரசியலுக்கு வழிவிடமாட்டார்கள். நாங்களும் விட மாட்டோம்" என்று முடித்தார்.

சிறப்பு அழைபாளார் பு.தா.இளங்கோவன், "நான் பா.ம.க.வை பல பகுதியில் வளர்த்தவன் என்ற முறையில் பாமகவை பற்றி பேச கடமை பட்டுள்ளேன். குடும்பத்தில் அரசியலை கலக்கமாட்டேன் என்று சொன்னார். ஆனால் அவர் மகன் முதல்வர் வேட்பாளார். அவர் வன்னியர்களுக்காக இதுவரைக்கு என்ன செய்துள்ளார். வன்னியர் குடும்பம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் ராமதாஸ் குடும்பம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் மக்களே. இவர் உங்களுக்கு எந்த ஒரு நல்லதையும் செய்யப்போவதில்லை. ராமதாஸ் உண்மை முகம் இன்னும் கொஞ்ச நாட்களில் வெளிவரும். தமிழ்நாட்டில் அம்மாவை எதிர்த்து அரசியல் செய்யவே அஞ்சுகிறது பல கட்சிகள். இப்போது முதலமைச்சர் பதவி காலியாக இல்லை. தற்போதுள்ள முதலமைச்சர் பதவியை ரெனிவல் செய்வதற்கான தேர்தல்தான் இது.

மாற்றுக்கட்சிகள் முதலமைச்சர் பதவிக்காக கனவு காண வேண்டாம். ஆளே இல்லாத கட்சிகள் மாநிலத்தை ஆள நினைக்கிறார்கள். நிதானம் இல்லாதவர் கூட முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். இவர்களுக்கு முதல்வர் பதவி கானல் நீர்தான். எப்போதும் நிரந்தர முதல்வர் அம்மாதான் என்று முடித்தார்.

-எம்.திலீபன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ