Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட்டில் ஜெ. படம்! வரும்... ஆனா?

மிழக அரசியலில்,  ஜெயலலிதா மீதான ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசத்திற்கு ஈடாக இந்த காலத்தில் மட்டுமல்ல, வேறு எந்தக் காலத்திலும் ஒரு உதாரணம் சொல்லிவிடமுடியாது.  அகராதியில் “விசுவாசம்” என்கிற வார்த்தைக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் பெயரை சேர்க்கும் அளவிற்கு அவருடைய விசுவாசம் இருக்கிறது. மன உறுதிக்கு ஜெயலலிதா எப்படியோ, அப்படியே விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம்.

தனது விசுவாசத்தின் உச்சக்கட்டமாக,  தன் துறையின் சார்பாக ஒவ்வொரு நிதி ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஜெயலலிதா படம் ஒட்டிய பெட்டியை கொண்டுவந்து,  பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்து, பின் பட்ஜெட் உரையை வாசிக்கச் செல்வார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த முறையும் ஜெயலலிதா படம் ஒட்டிய பெட்டியுடன் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பட்ஜெட் பெட்டியில் ஜெயலலிதா படம் சிம்பிளா வருமா அல்லது வித்தியாசமாக வருமா? என்பதுதான் தெரியவில்லை.

ஏனெனில் ஜெயலலிதா  2011-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போதும், பட்ஜெட் பெட்டியில் ஜெயலலிதா  படம் ஒட்டிய பெட்டியுடன் வந்து பத்திரிகைகளுக்கு மறக்காமல் போஸ் கொடுத்துவிட்டு, பின்னர்தான் பட்ஜெட் உரையை வாசிக்கச் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால் கடந்த 2014-15-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டின்போது,  முதல்வர் படத்தில் சற்று வித்தியாசம் தெரிந்தது. அப்போது பாராளுமன்றத்தின் பின்னணியுடன் கூடிய ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது. காரணம் அப்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வென்று,  மத்திய அரசில் ஜெயலலிதா பெரும்பங்களிப்பு செய்வார் என பரவலாக பேசப்பட்டது.

"தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமராவதற்கு அனைத்து தகுதிகளும் கொண்டவர். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால், முதல்வர் ஜெயலலிதாவின் மதிப்பு உயரும். இதன்மூலம் அவர் இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க முடியும்" என்று ஆண்டிப்பட்டி அழகேசனிலிருந்து அமைச்சர் ஓ.பன்னீ்ர் செல்வம் வரை பிரச்சாரம் செய்துகொண்டிருந்தனர்.

இதற்காகவே அந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பாராளுமன்ற பின்னணியில் இருக்கும் ஜெயலலிதா படத்துடன் பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ்.

இந்த நிலையில் வரும் மே மாதத்துடன் அதிமுக அரசின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. அதிமுக அரசு தனது ஆட்சி காலம் முடியும் முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.  2016-17-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம்,  வரும் 16-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் பெட்டியில் ஜெயலலிதா படம் சிம்பிளா வருமா அல்லது வரும் தேர்தலை மனதில்கொண்டு வித்தியாசமாக வருமா? என்பது 16-ம் தேதி தெரிந்துவிடும்.

ஓ.பன்னீர்செல்வம் எந்த படத்தையும்,  எந்த அளவிற்கும், வித்தியாசமாக வைத்துக்கொள்ளட்டும், ஆனால் நமக்கு அவரிடம் ஒரே ஒரு கோரிக்கைதான். கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின்போது 'மாண்புமிகு அம்மா' என 151 முறைக்கு மேல் சொல்லி சட்டமன்றத்தின் குளிரை இன்னும் கூட்டியதுபோல் இல்லாமல், இந்த முறை சொல்லாமல் இருந்தால் சரிதான்.

கழக நிரந்தர பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழக முதல்வர், இதயதெய்வம், டாக்டர், புரட்சித்தலைவி, அம்மா அவர்களின் ஆணைக்கிணங்காமல், இதை கொஞ்சம் நிறுத்திக்கொள்ளுங்கள் ஓ.பி.எஸ்.

- சோ.கார்த்திகேயன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ