Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுவிலக்கு நடைபயணத்தில் மயங்கி விழுந்தார் குமரி அனந்தன்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், நெல்லையில் இன்று நடைபயணம் மேற்கொண்டபோது சாலையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், கடந்த மாதம் சென்னையில் இருந்து நடை பயணத்தை மேற்கொண்டார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக நடைபயணம் மேற்கொண்டு வந்த குமரி அனந்தன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். 46-வது நாளாக நேற்று நாங்குனேரி அருகே நடைபயணத்தை மேற்கொண்ட அவர், பாணான்குளம் பகுதியில் இரவு ஓய்வு எடுத்தார். 47வது நாளான இன்று காலை தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.

நடந்து சென்ற சிறிது நேரத்திலேயே குமரி அனந்தனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சாலையில்  மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குமரி அனந்தன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்து அரசியல் கட்சித் தலைவர்கள், குமரி அனந்தன் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் மேற்கொண்ட குமரி அனந்தன்,  சாலையில் மயங்கி விழுந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆண்டனிராஜ்

படம்:
எல்.ராஜேந்திரன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ