Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தலுக்கு முன்பே பணப்பட்டுவாடா... தேர்தல் ஆணையத்திடம் சரமாரி புகார்!

புதுச்சேரி, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்காக இந்திய தேர்தல் ஆணையம்,  அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக புதுச்சேரியில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக,  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ரவத், துணைத் தேர்தல் ஆணையர் சந்திப் சக்சேனா உள்ளிட்டோர் புதுச்சேரிக்கு நேற்று (செவ்வாய்) இரவு வந்தனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில்,  இன்று காலை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,  ”தேர்தலுக்கு முன்னரே பல அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் விநியோகிக்க ஆரம்பித்துவிட்டன. இதனை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

மேலும், "பல வாக்காளர்களின் பெயர்கள் பல தொகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனே அதையெல்லாம் அடையாளம் கண்டு அவற்றை நீக்க வேண்டும். அதேபோல அரசு அதிகாரிகளை தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி,  தேர்தலை ஆளும் கட்சிக்கு சாதகமாக நடத்த முயற்சிப்பதையும் தடுக்க வேண்டும்.  கடந்த தேர்தலில் ஏனாமில் மட்டும் 2,670 கள்ள ஓட்டுக்கள் பதிவானது. அதனால் இந்த முறை அனைத்துத் தொகுதிகளிலும் இம்மாதிரியான கள்ள ஓட்டுக்களைத் தடுக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்திட வேண்டும்” என்று கூறினர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர்,  பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி, "இந்தியாவில் முதன் முறையாக புதுச்சேரியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை ஒப்புகைச்சீட்டைப் பெற்று தெரிந்து கொள்ளும் வசதியை,  வரும் தேர்தலில் புதுச்சேரியில் உருளையன்பேட்டை, உழவர்கரை மற்றும் காரைக்கால் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில் அமல்படுத்த உள்ளோம் என்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தனி மையமும் ஏற்படுத்த உள்ளோம்.

அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபோது அவர்கள் தேர்தலை முன்னிட்டு வாக்குக்கு பணம், பொருட்கள் தருவதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  யாருக்கும் சாதகமின்றி தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்றும் புதுச்சேரி தேர்தல் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

தேர்தலுக்கு முன்னரே பணம் கொடுப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருக்கிறோம். தேர்தல் அறிவிப்புக்குப்பின்னர் தேர்தல் துறை பணம், பொருள் கொடுப்பதை  தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும். இம்மாதம் ஒரு இடத்திற்கும் மேல் பதிவாகியுள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க சிறப்பு முகாம் நடத்த உள்ளோம். மாநில எல்லையோரம்,  இரு மாநிலத்தில் பதிவாகியுள்ள வாக்காளர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றவர்,  மே மாதம் 31-ம் தேதிக்குள் ஐந்து மாநிலங்களிலும் தேதிக்குள் தேர்தல் பணிகள் முடிக்கப்பட்டுவிடும்" என்றார்.

-ஜெ.முருகன் ​

எடிட்டர் சாய்ஸ்

MUST READ