Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக - காங்கிரஸ் கூட்டணி அமையுமா? குஷ்பு பதில்!

காங்கிரஸ் - திமுக கூட்டணி அமையுமா என்பது டெல்லியில் இருந்து குலாம் நபி ஆசாத் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தெரியவரும் என  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

கோவை வந்த  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் 1.50 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக  திமுக சொல்லியிருக்கிறது. தமிழக காங்கிரசும் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளது. இன்னும் எத்தனை பேர் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் இதில் அலட்சியம் காட்டாமல், கவனமாக கையாண்டு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலி வாக்காளர்கள் மூலம் வெற்றி பெற அதிமுக முயல்கிறது. இது அதிமுகவுக்கு கைவந்த கலை. தற்போது அதிமுகவுக்கு தேர்தலில் தோல்வி ஏற்படும் என பயமுள்ளதால் இந்த மாதிரி விஷயங்கள் மறுபடியும் நடக்கிறது.

திமுக -  பா. ஜனதா கூட்டணி உருவாகும் என சுப்பிரமணியசாமி தெரிவித்த தகவல் காமெடியாக இருக்கிறது. பா.ஜனதாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக கூட்டணி ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பது டெல்லியில் இருந்து குலாம் நபி ஆசாத் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தெரியவரும்.

மோடியின் தமிழக வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். மேடையில் மோடியும், பொன்.ராதாகிருஷ்ணனும் எவ்வளவு பொய் பேசினார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கட்சியில்  மீது சிலர் புகார் கூறுவது கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.


தமிழகத்தில் மதுவிலக்கு தேவை என அதிமுகவை தவிர எல்லா கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் வருமானத்தை மட்டுமே பார்த்து மதுவிலக்கு பற்றி பேசாமல் இருக்கிறது அதிமுக. அவர்களுக்கான வருமானமும் நின்று போகும் என்பதால் இருக்கலாம். 

மக்கள் நலக்கூட்டணியில் பெரிய பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. தமிழக காங்கிரஸ் தலைவர்,  மக்கள் நலக்கூட்டணி குறித்து கருத்து சொல்வார். கட்சியில் நான் போட்டியிடுவேனா என்பதை மேலிடத்தில் முடிவு செய்து முடிவை சொல்லட்டும்" என்றார்.

-ச.ஜெ.ரவி
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ