Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்தின் அடேங்கப்பா தேர்தல் நிதி வசூல்... கொந்தளிப்பில் மாவட்ட செயலாளர்கள்!

வ்வொரு மாவட்டச் செயலாளரும் ரூ.50 லட்சம் தேர்தல் நிதியாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, நிறைய செலவழித்து நொந்து போயிருக்கும் மாவட்டச் செயலாளர்கள், மீண்டும் நிதி வசூலிக்கச் சொல்வதால் கொந்தளிப்பில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  மக்கள் நலக் கூட்டணியை தவிர்த்து மற்ற கட்சிகள் இன்னும் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த், யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது.

காஞ்சிபுரத்தில் வரும் 20ம் தேதி கட்சியின் மாநாட்டை நடத்தும் விஜயகாந்த், அப்போது கூட்டணி முடிவு குறித்து கட்சியினரிடம் கருத்து கேட்க உள்ளார்.

இந்நிலையில், தேமுதிக கொடி அறிமுக நாள் விழா,  சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சிக் கொடியை ஏற்றி வைத்த விஜயகாந்த், பின்னர் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, "வரும் 20-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில்,  ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தேர்தல் நிதி வழங்க வேண்டும் என்று தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ரூ.50 லட்சம் தேர்தல் நிதியாக வழங்க வேண்டும் என மாநில நிர்வாகிகளிடம் விஜயகாந்த் நேற்று கூறினார். இந்த தகவல் உடனுக்குடன் மாவட்டச் செயலாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதோடு, தவணை முறையில் தேர்தல் நிதியை வழங்குவதற்கும் சலுகை அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில்,  மாநாட்டில் தேர்தல் நிதி வழங்கப்பட உள்ளது. அதன்பின் மற்ற மாவட்டச்  செயலாளர்களிடம் நிதி வசூலிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நிறைய செலவழித்து நொந்து போயிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் மீண்டும் நிதி வசூலிக்கச் சொல்வதால் கொந்தளிப்பில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ