Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்சி மேலிடம் அனுமதி அளித்தால் தேர்தலில் போட்டி - நடிகை நக்மா

புதுச்சேரி: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்,  கட்சித் தலைமை அனுமதி அளித்தால் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன் என்று மகிளா காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் நக்மா தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற மாநில மகிளா காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நக்மா செய்தியாளர் சந்திப்பின்போது, ”முந்தைய தேர்தல்களைப் போலவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக திகழும். தமிழகம் - புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும்.

மத்திய பா.ஜ.கவும்,  மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசும் மக்கள் விரோத போக்கில் செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ரங்கசாமியின் அரசு ரூ.7000 கோடி அளவுக்கு வெளிச்சந்தையில் கடன் பெற்று மாநில மக்களை தீராத கடன் சுமையில் தள்ளிவிட்டது. உட்கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளாமல் தரமற்ற மிக்சி, கிரைண்டர்களை இலவசமாக வழங்கி உள்ளது.

தமிழகத்திலும் மாநில அரசின் செயல்பாடு மெச்சக் கூடியதாக இல்லை. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு எடுக்கப்படவில்லை. ஒருபுறம் தாலிக்கு தங்கம் வழங்கிக் கொண்டே, மறுபுறம் மதுவால் அவர்களின் கணவர்களின் உயிர்களையும் பறித்து விடுகின்றனர். மேலும் இலவசங்களை காட்டி காட்டியே  மக்களை ஏமாற்றி வருகின்றனர்.  மத்தியில் இருக்கும் பாஜக அரசு,  மக்கள் நலன் குறித்து சிறிதும் கவலைப்படுவதாகத்  தெரியவில்லை. 

தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்ற மக்களுக்கான நல்ல திட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்தான் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தற்போது அவற்றை பாஜக முடக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

எதிர்வரும் சட்டமன்ற  தேர்தலில் மகளிருக்கு அதிகளவில் பிரதிநிதித்துவம் தர சோனியா காந்தி தீர்மானித்துள்ளார். இதுதொடர்பாக மகளிர் காங்கிரஸ் சார்பாகவும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதன்மூலம் தமிழகம் - புதுச்சேரி தேர்தல்களில் மகளிருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். வரும்  தேர்தலில் கட்சி மேலிடம் அனுமதி தந்தால் போட்டியிட தயாராக இருக்கிறேன்.  இது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

-ஜெ.முருகன்
படங்கள் : அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ