Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காத்திருக்கிறோம்...!' - மா.ஃபா.பாண்டியராஜன்

சென்னை: அ.தி.மு.க.வில் இணையும் காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக ராஜினாமா செய்துள்ள தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. மா.ஃ.பா பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ஆர்.சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், ஆர்.சாந்தி, க.தமிழழகன், மாஃபா.பாண்டியராஜன், மு.அருண் சுப்பிரமணியன், டி.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதேபோல், புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஆ.ராமசாமி, பா.ம.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வான ம.கலையரசு ஆகியோரும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்

இந்நிலையில், ராஜினாமா குறித்து விருதுநகர் தொகுதி உறுப்பினர் மாஃபா. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளில் என்னுடைய தொகுதிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியது மனதிற்கு நிறைவாக உள்ளது. குறிப்பாக, கவுசிக மகாநதி சீரமைப்பு, சாலைகள், நகராட்சி பகுதிகள் மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதுதவிர, சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டதுடன், பொதுமக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அரசு அளித்த பதில்களும் திருப்தி அளிப்பதாக உள்ளது. மீண்டும் மக்களுக்கு சேவை செய்வதற்காக அ.தி.மு.க.வில் இணையும் காலத்தை எதிர்நோக்கி காத்து இருக்கிறோம்" என்றார்.

பதவி விலகிய நிலக்கோட்டை சட்டசபை தொகுதி உறுப்பினர் ராமசாமி கூறும்போது, ''சரியான தருணத்தில் நல்ல முடிவு எடுத்து உள்ளேன். தமிழகத்தில் நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், முதலமைச்சர் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் நலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் என் தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்தவற்றை செய்துள்ளேன். இனிவரும் காலங்களில் எந்த கட்சியில் இணைந்தால் மக்களுக்கு முழுபங்களிப்பு அளிக்க முடியுமோ அதை செய்ய விரும்புகிறேன். என்தொகுதி மக்களுக்கு என்றும் உறுதியாக இருந்து சேவை செய்ய விரும்புகிறேன்" என்றார்.

இதேபோல் பதவி விலகிய அணைக்கட்டு சட்டசபை தொகுதி உறுப்பினர் கலையரசு கூறும்போது, ''தொகுதி மக்கள் சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தார்கள். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் அனைத்து விதமான பணிகளையும் முழுமனநிறைவுடன் கடந்த 5 ஆண்டுகளில் செய்து தந்துள்ளேன். தேர்தலின்போது வெற்றி பெறுவது வரைதான் ஒரு கட்சியின் வேட்பாளர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தேர்வு செய்த தொகுதி மக்கள் அனைவருக்கும் பொதுவானவன் என்ற அடிப்படையில் பணி செய்து உள்ளேன். இந்த சூழ்நிலையில் தற்போது நான் வகித்து வந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன். பொதுமக்களின் சேவையை நோக்கி என்னுடைய அரசியல் பயணம் தொடரும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ