Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முறைகேடுகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் என்ன விதிவிலக்கா...?

க்கள் நல கூட்டணி மேடைகளில்,  இயற்கை வள சுரண்டலுக்கு எதிரான இவர்களின் குரலை கேட்க முடிகிறது.... கிரானைட் கொள்ளைக்கு எதிராகவும், மணல் கொள்ளைக்கு எதிராகவும் அனைத்து மேடைகளிலும் ஆக்ரோஷமாக முழங்குகிறார்கள்... ஆனால், இவர்களது குரலை கேட்கும் போதெல்லாம், ‘உங்களில் யார் தவறு செய்யவில்லையோ, அவர்கள் முதலாவது கல்லை எறியுங்கள்’ என்ற ஏசுவின் வசனம் நினைவிற்கு வருவதை தடுக்க முடியவில்லை.

ஆம். கம்யூன்ஸ்ட்டுகளைதான் குறிப்பிடுகிறேன். தாமிரபரணியை மீட்க, ஸ்ரீ வைகுண்டம் அணையை தூர்வார என இயற்கையை காக்க முதல் வரிசையில் நிற்கும் இடதுசாரிகளைதான் குறிப்பிடுகிறேன். சீனாவின் இடதுசாரிகளுக்கும், கியூபாவின் இடதுசாரிகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது போல், மதுரையின் கிரானைட் கொள்ளையை அணுகுவதிலும், கிருஷ்ணகிரியின் கிரானைட் கொள்ளையை அணுகுவதிலும் இடதுசாரிகளிடம் நிறைய வேறுபாடு இருக்கிறது. மதுரையில் நடந்தால் கொதிப்பவர்கள், கிருஷ்ணகிரியில் நடந்தால் மெளனம் சாதிக்கிறார்கள்.


இந்த கட்டுரையை எழுத காரணம், அண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் இரா. முத்தரசன் அளித்த பேட்டி.

பேட்டியின் சாரம் இதுதான்,  "அன்புமணி தன் மீது உள்ள ஊழல் களங்கங்களை போக்கி கொண்டு, தேர்தலில் நிற்கட்டும்" . சரி தானே... இதில் என்ன பிழை இருக்கிறது என்கிறீர்களா...? சரிதான். ஆனால், இதை சொன்னது அருகில் பல வழக்குகள், குற்றசாட்டுகளில் சிக்கிய, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தளி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரனை அருகில் வைத்துக்கொண்டு.

கிருஷ்ணகிரியில் நடக்கும் கிரானைட் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் கே வேடியப்பன், “ஆற்று மணல், தாது மணல் கொள்ளை, கிரானைட் ஊழலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராமசந்திரனும், அவரது பினாமிகளும் கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர், அதற்காக மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இது அவர்கள் தலைமைக்கு தெரியாதா...? இல்லை தெரிந்தும் ராமசந்திரனுக்கு அஞ்சுகிறதா அவரது தலைமை...?” என்று கேள்வி எழுப்புகிறார்.

“இது மட்டுமல்லாமல், பல கொலைகளிலும் ராமசந்திரனுக்கு நேரடி தொடர்பு உண்டு. முக்கியமாக பெரியார் திராவிட கழக பொறுப்பாளர் பழனிசாமி கொலை வழக்கில் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வளவு குற்ற பின்னணி உடையவரை அருகில் வைத்துக் கொண்டு, இடதுசாரிகள் 'நேர்மையான அரசு மாநிலத்தில் ஆட்சிக்கு வர எங்களுக்கு வாக்களியுங்கள்'  என்று மக்களிடம் கேட்பது முரண் மட்டுமல்ல, மக்களை முட்டாளாக்கும் செயல்,” என்கிறார் வேடியப்பன்.


இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இரா. முத்தரசனிடம் பேசிய போது, ”எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறீர்கள்...? ராமசந்திரன் என்ன முதல்வர் வேட்பாளரா... இல்லை மத்திய மந்திரியாக இருந்தாரா...? அவர் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் அரசியல் காழ்புணர்சியால் போடப்பட்டவை...” என்றார் காட்டமாக.

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ