Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்டன் அழைப்பு... கதி கலங்கிய மாண்புமிகுக்கள்!

தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் முடிந்த ஓரிரண்டு நாட்களிலேயே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்துள்ளது.

கூட்டத் தொடர் முடிந்ததுமே சொந்த ஊருக்குப் போய்விட்டு வரலாம் என்று கிளம்பிய அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள்,  மந்திரிகள்,  தலைமையில் இருந்து வந்த தகவலால் போன வேகத்தில்  சென்னையை நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

அதிமுகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள்,  மாநிலம் முழுவதும் இம்மாதம் 25- ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை தொடர்ந்து நடத்தப்பட இருப்பதாக முன்னரே அறிவிப்பு கொடுத்திருந்தனர்.  

'பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்தது போலவும் ஆச்சு, ஊருக்கு போனது மாதிரியும் ஆச்சு' என்று  கூட்ட ஏற்பாட்டைக் காரணமாக வைத்துக் கொண்டு,  சொந்த ஊருக்கு நகர்ந்த 'மாண்புமிகு' கள் தலைமையில் இருந்து அழைப்பு வந்ததால்  சென்னைக்கு  திரும்பத் தொடங்கியுள்ளனர்.

அதிமுக நிர்வாகிகள் தரப்பில் இது குறித்து கேட்டோம்.

"அம்மாவோட பிறந்த நாளுக்கு இரண்டுநாள் முன்பாகவே நாங்க சென்னையில் இருந்தால்தான் பேனர் வைப்பது, கட் அவுட்களுக்கு ஆர்டர் கொடுத்து அதை வைக்கும் இடத்தை தீர்மானிப்பது என்று செயல்பட முடியும்.

இந்த முறை அம்மா பிறந்த நாளுக்கு இரண்டுநாள் முன்புதான் அசெம்பிளி முடிந்தது. இதைத் தொடர்ந்து  24 முதல் 29 வரையிலான தொடர் பொதுக்கூட்ட அறிவிப்பும் வந்ததால் நாங்கள் அனைவரும் அதில் பிஸியாகி விட்டோம். ஊருக்குப் போன பின்னர்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த தகவல் வந்தது. அங்கிருந்து  அனைவரும் கிளம்பி வந்து விட்டோம். நாளை (23-ம் தேதி) அனைவருமே சென்னையில் இருப்போம்." என்கின்றனர்.

நிஜ நிலவரம் இப்படியிருக்க, "மந்திரிசபையில் திடீர் மாற்றம்... ஊருக்குப் போயிருக்கும் மந்திரிகளை மொத்தமாக அம்மா கார்டனுக்கு வரச் சொல்லியிருக்கிறார்" என்று ஒரு குரூப் நடுவில் நுழைந்து கிடா வெட்ட ஆரம்பித்திருக்கிறது.

கட்சித் தலைமை கூப்பிட்டதே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்குதான் என்பது லேட்டாக புரிய... நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர் சென்னைக்கு வந்திருக்கும் மாண்புமிகுக்கள்.

  -ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ