Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மா ஆணையிட்டால் சரத்குமாரை எதிர்த்து நிற்பேன்... ஒரு டாக்டரின் கலகல பேட்டி!

ன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் காமராஜர் ஆதித்தனார் கழகத் தலைவராக இருப்பவர் டாக்டர்.சிலம்பு சுரேஷ்.  அவரை அவரது வீட்டில் சந்தித்தோம்.

"பத்திரிகைகாரங்களுக்கு மரியாதை கொடுக்கணும், அதனால கண்டிப்பா பேட்டி தருகிறேன்..." என்று சோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

அவர் அளித்த கலகல பேட்டி இதோ...
 

இப்போதைய அரசியல் நிலவரம் எப்படி இருக்கு?

மத்தியில பிஜேபி. அது மதச் சார்பு கட்சி. இப்போ தமிழகத்துல அம்மா தலைமையில நல்லாட்சி நடந்துட்டு இருக்கு. வெள்ளச் சேத பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருது.  ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்குறாங்க. தாலிக்கு தங்கம், பல்வேறு நலத் திட்டங்கள் அம்மா ஆட்சில நிறைவேறிட்டு இருக்கு. ரவுடியிசம் ஒழிக்கப்பட்டு இருக்கு. கள்ளச் சாராய ஒழிப்பு, தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சி நடக்குது. அடுத்தும் அம்மாதான் ஆட்சிக்கு வருவாங்க. விளை நிலங்களை பிளாட் போட்டு விற்க தடை விதிக்கப்பட்டிருக்கு. மின்சார தடை நீங்கியிருக்கு, பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகியிருக்கு. அம்மாவின் ஆட்சி நல்லதையே செய்கிறது. இதை நான் சொல்லவில்லை, மக்கள் சொல்றாங்க. அம்மா ஆட்சி அதுவே மக்களாட்சி.

உங்க கட்சியை பத்தி கொஞ்சம் சொல்லுங்க?

தம்பி, அது கட்சி இல்ல கழகம். சுமார் மூன்று லட்சம் உறுப்பினர் இருக்காங்க. மறைந்த கராத்தே செல்வினால் தொடங்கப்பட்டு, இப்போ என் தலைமையில இயங்கிகிட்டு வருது. பரவலாக எங்க கட்சியை தமிழ்நாடு முழுக்க தெரியும். முக்கியமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தொடங்கிய கட்சி. அவர்களுக்காக தொடர்ந்து போராடும். தமிழரின் உரிமை மீட்கப்படணும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.

அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் என்ன வித்தியாசம்?


திமுக ஒரு குடும்ப கட்சி, மக்களை பற்றி சிந்திக்காத கட்சி, தான் தன் குடும்பம் என்று இருக்கிற கட்சி. ஆனா அதிமுக அப்படியில்லை. மக்கள் நலன் விரும்பும் கட்சி. எவ்வளவு நலத்திட்டங்கள்...?அடுத்தும் அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும். அம்மா மீண்டும் முதல்வராவார். நாங்க அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கோம்.

இந்த கூட்டணி மேட்டர் அம்மாவுக்கு தெரியுமா?

ஆர்.கே.நகர் இடைதேர்தல்ல அம்மா போட்டியிடும் போது அம்மாவுக்காக  எலக் ஷன் ஒர்க் பண்ணுனோம். அம்மாதான் ஜெயிப்பாங்க என உலகத்துக்கே தெரியும். அவங்களுக்காக ஒர்க் பண்ணுனது எனக்கு பாக்கியம்.

காமராஜர் ஆட்சியை தருவோம் என பல கட்சிகள் சொல்றாங்களே, இதுக்கு உங்க கருத்து என்ன?

காமராஜர் பெயரை சொல்லுறதுக்கு எந்த அரசியல்வாதிக்கும் யோக்கியதை கிடையாது. அவரு எவ்வளவு பெரிய தலைவர். தமிழ்நாட்டின் நலனே தன் நலனுனு வாழ்ந்தவரு. இப்போ உள்ள அரசியல்வாதிகள் தன் நலன்தான் தமிழ்நாட்டு நலன் என்று வாழ்றாங்க. சும்மா பொய் சொல்லிட்டு திரியுறாங்க. மக்கள் ஏமாற மாட்டார்கள். காமராஜர் தோற்க காங்கிரஸ்தான் காரணம். எங்க முன்னோர்கள்தானே அப்பச்சியை இந்த குமரி மண்ணில இருந்து பாராளுமன்றத்துக்கு மக்கள் பணி செய்ய அனுப்புனாங்க. அவருடைய ஆட்சிதான் பொற்கால ஆட்சி, அதற்கு பின்னால புரட்சி தலைவர், காமராஜரை தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர். எம்.ஜி.ஆரால் மக்களுக்கு நன்மை தரும் ஆட்சி நடந்தது. இப்போது அம்மாவால் நல்லாட்சி தமிழ்நாட்டுல நடக்குது.

சரிதான், ஆனால் உங்கள் கட்சி நாடார் மக்களுக்காக மட்டுமே உழைக்கும் கட்சி என்று பரவல சொல்றாங்களே?

எங்க மக்களுக்காகதான் உண்மையா உழைக்கிறோம். ஆனா நாங்க சரத்குமாரை போல மக்களை ஏமாத்தல.

இது என்ன புது மேட்டராக இருக்கு?

சரத்குமார் எங்க சமுதாய ஓட்டை வாங்கி சமத்துவம் என்கிற போர்வையால தன்னை மூடிக் கொள்கிறார். சரத் ஒரு நடிகர். அவருக்கு எங்க சமுதாய மக்கள்தான் பலமாக இருந்தனர். எங்க சமுதாய ஓட்டுகள்தான் அவருக்கு வேணும். ஆனா, சமுதாயத்துக்கு ஒரு பிரச்னைனா குரல் கொடுக்க மாட்டாரு. ராதிகாதான் சரத்தை இயக்குகிறார். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவர் பதவியை ரிசைன் பண்ணிட்டுதான் கட்சியை வளர்த்தார். ஆனா சரத் அப்படி இல்ல, அதனால அவரால கட்சியை வளர்க்க முடியல. வெளிப்படையா அரசியல் பண்ண சரத்துக்கு தெரியாது. அவரால் இனி ச.ம.க.வை காப்பாற்ற முடியாது.

எங்க கழகக் கொடியை ரவுடி கட்சி கொடினு சத்ரபதி படத்துல அவமதிச்சாரு. நாடாா் மக்களை ஏமாத்துறாரு. பொது மக்களை ஏமாத்துறாரு. தென்காசி மக்களுக்கு இதுவரை சரத்குமார் என்ன நல்லது செய்தாரு. அவருக்கு தொகுதி நினைப்பே கிடையாது. தொகுதி மக்களுக்கு என்ன செய்தாரு என்று என்னோடு நேருக்கு நேர் சரத்குமார் விவாதிக்க தயாரா?. காமராஜர் உலகம் போற்றும் தலைவர். அவரை, சமுதாய தலைவராக மாற்றி அவரது புகழை கெடுப்பதே சரத்குமார்தான். ச.ம.க. மாநாடுகளை வட மாவட்டங்களில் சரத்குமாரால் நடத்த முடியவில்லை. காரணம் தென் மாவட்டங்களில எங்க சமுதாயம் அதிகமாக இருக்கு. விஜயகாந்தை போல சாதிக்கு அப்பாற்பட்டு அவரால தேர்தல்ல நிக்க முடியுமா? முடியாது. ஏன்னா, சரத்குமார் சாதியை அடிப்படையாக கொண்டு, சமத்துவத்தை போர்வையாக போர்த்தி அரசியல் செய்கிறார். வரும் தேர்தல்ல சரத்குமார் தி.மு.க. கூட்டணிக்குதான் போவார். எந்த தொகுதியில நின்னாலும் தோப்பார். மக்களை இனி சரத்குமாரால் ஏமாற்ற முடியாது.

இதுவரை உங்க கழகம் எத்தனை தேர்தலில் போட்டியிட்டுருக்கு, வரக்கூடிய தேர்தல்ல நீங்க போட்டியிடுவீர்களா?

இதுவரை கழகம் போட்டியிட வில்லை. இனி போட்டியிடும். நான் 1996ல்,  நாகர்கோவில்ல பா.ம.க. சார்பில் சட்டமன்ற தேர்தல போட்டியிட்டு 1200 ஓட்டு வாங்கினேன். இந்த தேர்தல்ல அ.தி.மு.க கூட்டணியில இருக்கோம். அம்மா சீட் தந்தா நிற்பேன். அம்மா சொன்னா சரத்குமாரை எதிர்த்தும் நிற்பேன். பல படங்கள்ல வேற நடிச்சிட்டு இருக்கேன். அதுவும் சீக்கிரம் ரிலீஸ் ஆகும்னு நினைக்குறேன்.

இது வேறயா!

-த.ராம்

படங்கள்:
ரா.ராம்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close