Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒபாமா முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை அனைவருமே போஸ்டர் பிரியர்கள்தான்!

ண்டிப்பட்டியில் துவங்கி அண்ணா சாலை வரை அனைத்து இடங்களிலும் தெருவை மறைத்து பேனர் வைக்கும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் முதல் அமெரிக்க அதிபர் வரை யாருமே தேர்தல் விளம்பரங்களை விட்டு வைக்கவில்லை.

பேனர் அடிப்பது, கட் அவுட் வைப்பது என்ற அளவில் மட்டுமே இருந்த அரசியல்வாதிகளுக்கு மாற்றம் தேவைப்பட்டது. போஸ்டர்களுக்கு புதுவடிவம் கொடுக்க துவங்கியதன் ஆரம்பம்தான் டிஜிட்டல் விளம்பரங்கள்.

6 மாதத்தில் ஒருவர் அதிபர் ஆகலாம், 15 மாதங்களில் ஒருவர் பிரதமராகலாம்.  இவையெல்லாம் டிஜிட்டல் விளம்பரங்களால் சாத்தியமாகும் என்றால் நம்புவீர்களா? ஆம் இவைகளும் ஒருவரின் வெற்றிக்கு காரணமாகி விடுகின்றன. என்னதான் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் என்று நாம் கூறினாலும்,  இந்த டிஜிட்டல் விளம்பரங்களுக்கு பின்னால் ஒரு பெரிய சைக்காலஜி உள்ளது.

ஒபாமா,  அமெரிக்க அதிபர் தேர்தலில் 'ஹோப்' என்ற வாசகத்துடன் பிரச்சாரத்தை துவங்கினார். HOPE என்ற வார்த்தையுடன் கூடிய ஒபாமாவின் புகைப்படம் உலக வைரல் ரகம். அதுதான் அவர் மீதான நம்பிக்கையை கூட்டியது என்றே கூறலாம். அடுத்து அவர் செய்தது நம்மால் முடியும் எனும் YES WE CAN பிரச்சாரம்.  இதுவும் அவரை ஒரு படி மேலே உயர்த்தியது. மேற்கத்திய நாடுகளில் ஒரு மனப்பான்மை உண்டு. ஒருவரை பற்றி நல்ல விஷயங்களை தொடர்ந்து சில காலங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால் அவரை பற்றிய நல்ல அபிப்ராயம் மக்கள் மனதில் வந்துவிடும். இதையேதான் தேடுதல் தளங்கள் மூலம் அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.
 
இதே ரகத்தில் நாம் பார்க்க இருக்கும் இரண்டாவது உதாரணம் மோடி. இந்த வார்த்தையை நீங்கள் எங்கு அதிகம் கேட்டுள்ளீர்கள் என்று இந்தியரல்லாத ஒருவரிடம் கேட்டால்,  அவரது பதில் சமூக வலைதளம் என்பதுதான். 3டி தொழில்நுட்பத்தில் உரையாற்றுவது,  ட்விட்டரில் வாழ்த்து சொல்லுவது, ஒரே நேரத்தில் 3 இடங்களில் நேரடி நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்வது, செல்ஃபி எடுத்துக் கொள்வது என இவையெல்லாம்தான் இவரை பற்றி தேடினால் முதலில் வருபவையாக உள்ளது.  உலக அளவிலும், இந்திய அளவிலும்தான் இந்த உத்திகள் என்றில்லை. தமிழகத்திலும் இந்த நவீனத்துவமிக்க பிரச்சாரங்கள் வரத்துவங்கிவிட்டன.

பா.ம.க.,  மினிமலிஸ்டிக் போஸ்டர்களுடன் மாற்றம்...முன்னேற்றம்..அன்புமணி...முதல் நாள் முதல் கையெழுத்து என பச்சை, மஞ்சள் நிற போஸ்டர்களை இணையத்திலும், பிரிண்ட் செய்தும் வெளியிட்டது. தி.மு.க.,  தனது முடியட்டும்...விடியட்டும் மேடைகளை மேற்கத்திய பாணியில்,  மேடையில் ஒருவர் நின்று பேசும் பாணியில் அமைத்தது. அதன் வடிவமைப்பிலும் மினிமலிஸம் காணப்பட்டது. தற்போது அ.தி.மு.கவும், தி.முக.வும் ஃப்ளிப்கார்ட் விளம்பரங்களை போன்ற விளம்பரங்களை ஒரு பக்க அளவில் பிரபலப்படுத்தி வருகின்றன.
 
சினிமா வசனங்களைக் கொண்டும், தொலைக்காட்சியில் வைரலான வரிகளைக் கொண்டும் விளம்பரம் செய்யும் இந்த கட்சிகளின் பிரதான ஊடகம் வாட்ஸ் அப். ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படம் என டிஜிட்டல் வளர்ச்சியை சரியாக பயனபடுத்தி கொள்கின்றன இந்த கட்சிகள்.

ஏன் இவற்றை செய்கின்றன?

1. ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப கண்களுக்கு புலப்படும்படி காட்டினால் அது மனதில் ஆழமாய் பதியும். அவற்றை நம்புவதற்கு மனம் தயாராகும்.


2. பொருட்களுக்கு செய்யும் பிராண்டிங் போன்ற உத்திதான் இது.


3. ஒரு நபரை மையப்படுத்தி செய்யப்படும் பிரச்சாரங்களின் முடிவு சாதகமாகவே அமைகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி என்பதைவிட மோடி என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதற்கு ஒரு உதாரணம் ஆப் கி பார் மோடி சர்க்கார்...(கவனியுங்கள் பி.ஜே.பி சர்க்கார் அல்ல...)

4. கூகுள் தேடலில் ஒரு கட்சி தலைவரின் பெயரை தேடினால் அவரை பற்றிய கெட்ட விஷயங்களை அகற்றி நல்ல விஷயங்களை முன்னிறுத்த கட்சிகள் தனி டெக் டீம் வைத்துள்ளன. அவை தேடுதலை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக இருக்கின்றன. (என்னய்யா...லைக்ஸ் குறைஞ்சிருக்கு- கருணாநிதி கட்டுரையை படிக்க) http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=101183


5. பழைய பிரச்சார வாசகங்களான வாக்காளர் பெருமக்களே...ஓடோடி வருகிறோம் என்ற வசனங்கள் ட்ரெண்டில் இல்லை என்பதால்...வாட்ஸ் அப் ட்விட்டர் நோக்கி ஓடுகின்றன அரசியல் கட்சிகள்.

இவர்கள் அனைவருமே தங்களது வெற்றிக்கு பின் தொடரும் உத்திகளில் இந்த போஸ்டர் உத்திகள் இடம் பெற்றுள்ளன. யாருக்கு தெரியும் நாளை பிரச்சாரம் செய்யும் போது,  "எங்களால் 10000 போஸ்டர் ஒட்டும் தொழிலாளிகள் வாழ்கிறார்கள். 300 டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது" என  கூறினாலும் கூறுவார்கள். நாடோடிகள் பட பாணியில் போஸ்டர் ஒட்டும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன.

நல்ல ஆட்சியை நடத்திக் காட்டினால் இத்தனை அலப்பறைகள் ஏன்...?

- ச.ஸ்ரீராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close