Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'குற்றங்களை மறைக்கவே அதிமுக - திமுக விளம்பர போட்டி!'

சென்னை: தங்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக -  திமுக கட்சிகள் விளம்பர போட்டிகள் நடத்துகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

''கடந்த சில நாட்களாக அதிமுகவும், திமுகவும் செய்துவரும் விளம்பரங்கள் தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளன. ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தி அரசு செலவில் வழங்கப்படும் பத்திரிகை விளம்பரங்கள் ஒருபுறம் என்றால், அதிமுகவை விமர்சித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் திமுகவினர் விளம்பரம் கொடுப்பது மறுபுறம் நடக்கிறது. இத்தகைய விளம்பரங்களின் நோக்கம் திமுக - அதிமுகவின் லாவணி அரசியலை பிரதானப் படுத்தி தமிழக மக்களின் உண்மையான பிரச்சனைகளை மறைப்பதேயாகும். இரண்டு கட்சிகளின் இத்தகைய கபடப் பிரச்சாரத்தின் பிடியில் மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

திமுகவின் தவறுகளை சரி செய்வோம் என்று சூளுரைத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு விலை இல்லை, சிறு குறுந்தொழில்கள் பாதிப்பு, பல அரசுப்பள்ளிகள் மூடல், வேலையின்மை அதிகரிப்பு என்பதுடன் அரசு நிர்வாகத்தின் அடிமுதல் நுனிவரை அனைத்திலும் ஊழல் என்ற சூழ்நிலையே தொடர்கிறது. 89 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், தனிநபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம், விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை 2 - 3 மடங்குக்கு மேல் உயர்த்துவோம் என்று 2011 தேர்தல் அறிக்கையில் அதிமுக அள்ளிவிட்ட வாக்குறுதிகள் காற்றோடு போய் விட்டன.

நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனங்கள் மூடப்பட்டது பற்றி தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள திமுக, தன் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பேசுவதில்லை. வேலைவாய்ப்பின் பெயரால் வரவேற்கப்படும் அன்னிய நிறுவனங்களுக்கு திமுகவும், அதிமுகவும் சலுகைகளை மாறிமாறி வழங்கியுள்ளன. தடையில்லா மின்சாரம், தொழிற்சங்க உரிமை தடுக்கப்பட்டது என தமிழக நலன்களை அடகுவைத்து - தனியார் முதலாளிகளின் வேட்டைக் காடாக மாற்றியவை திமுகவும் அதிமுகவாகும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்காத திமுக, அதிமுக நோக்கியா ஏற்படுத்திய ரூபாய் 30 ஆயிரம் கோடி வரி இழப்புக்கும் காரணம் என்பதுடன், பல்லாயிரம் பேர் வேலை இழப்புகளுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.

அதே போல, தமிழகத்தின் இயற்கை வளங்கள் வரன்முறையற்றுச் சுரண்டபட்டதைத் தடுக்க ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் எதுவும் செய்துவிடவில்லை. மணல் கொள்ளை குறித்து விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள திமுக - தனது ஆட்சிக் காலத்திலும் இத்தகைய சுரண்டல் நடைபெற்றதை மறைத்துவிட முடியுமா?

தாமிரபரணி, பாலாறு, காவேரி தொடங்கி தமிழகத்தில் ஆறு என்று கருதப்படும் எல்லா இடத்திலும் மணல் கொள்ளை தங்குதடையில்லாமல் நடைபெற்றுவருகிறது. ஆற்று மணல் கொள்ளையால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.1.4 லட்சம் கோடியாகும். தாதுமணல் கொள்ளை ஏற்படுத்தியிருக்கும் இழப்பு ரூ.2 லட்சம் கோடிகளாகும். இவை தவிர செம்மண் கூட பல்லாயிரம் டன் கணக்கில் கொள்ளையாகிறது. செம்மண் வெட்டியெடுத்த வழக்கில் முந்தைய திமுக அமைச்சர் மீதே வழக்கு நடந்துவருவது இங்கே குறிப்பிடத்தக்கது. மீத்தேன் வாயு தோண்டி எடுப்பது, விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய்களை பதிப்பது போன்ற விவசாய பாதிப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது திமுக என்பதை மறந்து விட முடியாது.

திமுகவோ அதிமுகவோ வாய் திறக்க மறுக்கும் கிரானைட் கொள்ளை பற்றிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளையும் தாண்டி மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ்., அந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை தன் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளார். திமுகவோ, அதிமுகவோ இது பற்றி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதே நடந்த ஊழலில் இருவருக்கும் பங்குண்டு என்ற உண்மையின் பிரதிபலிப்பு தானே. இந்த இரண்டு கட்சிகளும் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டால்தான் மக்கள் சொத்துக்களை மீட்க முடியும்.

பொதுச் சொத்துக்கள் கொள்ளை போக அனுமதித்து விட்டு, அதனை அவரவர் மேடைகளில் ஆடல்பாடல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், விளம்பரங்களிலும் மறைத்துவிடலாம் என்றே இரண்டு கட்சிகளும் கருதுகின்றன. பல்லாயிரம் கோடி பணத்தை இதற்காக அவர்கள் தொடர்ந்து செலவிடுவார்கள் என்பது வெளிப்படை.

தமிழக மக்கள் தேர்தல் மேடையில் அரங்கேற்றப்படும் இந்நாடகத்தை அடையாளம் கண்டு இந்த இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close