Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஶ்ரீரங்கத்தில் சசி... அதிமுக வேட்பாளர் பட்டியலுடன் சிறப்பு பூஜை ?

கடந்த11 -ம் தேதி மதுரை, பழனி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,  இன்று திருச்சி ஶ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்தார்.


காலை 11.30 மணிக்கு,  திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் வழியாக ஜெயா டிவி சி.இ.ஓவும் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளுமான  பிரபாவதி சிவகுமார் சகிதமாக கோவிலுக்குள் சென்ற சசிகலா,  கருடத்தாழ்வார், அடுத்து மூலவர், தாயார் சன்னதிகளில் மகிழம்பூ, சந்தனமாலை, பழங்கள் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய பூஜை பொருட்கள் கொடுத்து மிக பக்தியோடு  தரிசனம் செய்தனர்.

அடுத்து அங்கிருந்து பேட்டரி காரில் புறப்பட்டு தாயார் சன்னதியிலும், அதன்பிறகு சக்ரத்தாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளிலும் சாமி கும்பிட்ட சசிகலா, அங்கிருந்து வடக்கு வாசல் வழியாக  திருச்சி ஶ்ரீரங்கம் அகோபில மடத்தின் 46-வது ஜீயர்  ஸ்வாமிகளிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு  கிளம்பினார்.  அடுத்து அங்கிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்ட சசிகலா, சரியாக 1.50க்கு கோவிலை அடைந்தார். அங்கு 2.10 வரை தரிசனம் செய்தவர், அங்கிருந்து கிளம்பி திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்தார். 

ஶ்ரீரங்கத்தில் மூலவருக்கு,  ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. கூடவே அதிகாலையில் ஜெயலலிதா பெயரில் விஸ்வரூப தரிசனம் பூஜை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை சசிகலா பழனிக்கும், மதுரைக்கும் போனபோது கையில் ஒரு துண்டு சீட்டு வைத்திருந்ததை பார்த்து,   'வேட்பாளர் பட்டியலை சுவாமியிடம் வைத்து பூஜை செய்ய வந்தார்' என செய்தி வெளியானது.

அதனால் இந்த முறை கையில் எந்த கடிதத்தையும் வைத்திருக்கவில்லை. கையில் இரு பச்சை கலர் பைகளை வைத்திருந்த பிரபாவதி, கோவிலுக்குள் செல்லும்போது மட்டும் ஆரஞ்சு கலர் கவரை கையோடு எடுத்துக்கொண்டு போனார்.  அந்த கவரில் அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இருந்ததாகவும், ஜெயலலிதாவின் பெயரில் சிறப்பு பூஜை செய்த கையோடு அந்த கவரையும் வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

-சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்