Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க.வுக்கே!'- ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளேவா....?

சென்னை: கடந்த முறை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்ததால் சோழிங்கநல்லுார் தொகுதியை இழந்துவிட்டதாகவும், அதனால் இந்த முறை அத்தொகுதியை திமுக விட்டுக்கொடுக்கக்கூடாது என்றும் திமுக தலைமையை நோக்கி குரல் கொடுக்கத்துவங்கியுள்ளனர் சோழிங்கநல்லுார் தொகுதி திமுக நிர்வாகிகள்.

சோழிங்கநல்லூர் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நீலாங்கரையில் உள்ள சுகன்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாயகம் கவி, பாலவாக்கம் சோமு, வி.எட்டியப்பன், விஸ்வநாதன், மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியபோது,  ''சொத்து வாங்கவேண்டும், வேலை வாங்க வேண்டுமென்பதற்காக ஆட்சிக்கு வரவேண்டும் என நிறையபேர் நினைப்பார்கள். ஆனால் கஷ்டம் இல்லாமல் கட்சியை நடத்த வேண்டும், தடையில்லாமல் ஈ.சி.ஆர். முழுவதும் கட்சிக்கு சுவர் விளம்பரம் செய்ய வேண்டும் என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள்.  இதுதான் தி.மு.க. இயக்கம். இந்த எண்ணம் இருக்கும்வரை தி.மு.கவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

“தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். 2011 தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். சென்னை மாவட்டத்தின் வருவாய் மாவட்ட அளவில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி வேளச்சேரி. இங்கு இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். சோழிங்கநல்லூரும், வேளச்சேரியும் தெற்குமாவட்டத்திற்குட்பட்ட பகுதி. இந்த இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட தலைமையிடம் கேட்டு வருகிறோம்” என்றார்.

பாலவாக்கம் சோமு பேசுகையில், '' மதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்தேன். கடந்த மூன்று தேர்தல்களாக தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான தேவையையும், அவசியத்தையும் அவரிடம் எடுத்து கூறியிருந்தேன். அவரும் சரி என்று கூறுவார். கடைசியில் ஏதாவது காரணத்தைச் சொல்லி தவிர்த்து விடுவார். தற்போதும் கூட, அ.தி.மு.கவுக்கு எதிரான மக்கள் மனநிலையைக் கருத்தில் கொண்டு தி.மு.க. ஆட்சி அமைக்க கூட்டணி வைக்கலாம். கலைஞரை முதல்வராக்கலாம் என்றேன். அவரோடு காரில் போகும்போதெல்லாம் இதுதொடர்பாகப் பேசுகையில் சரி என்றவர்,  திடீரென எடுத்த முடிவைப் பார்த்தபிறகுதான், இவர் கலைஞரை முதலமைச்சராக்கக்கூடாது என்ற திட்டத்துடன்தான் செயல்பட்டிருக் கிறார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு இங்கு வந்துவிட்டேன்” என்றார்.

சீனியர் நிர்வாகிகள் பேசுகையில், கருணாநிதியை முதல்வராக்குவோம் என்றும், இளைய நிர்வாகிகள் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்றும் குறிப்பிட்டனர். யார் முதல்வர் என்பது அப்புறம் இருக்கட்டும். யாராக இருந்தாலும் சீக்கிரம் அறிவித்தால் அதற்குத்தக்கபடி தங்கள் பிரசாரத்தை திட்டமிட்டுக்கொள்ள வசதியாக இருக்கும் என்ற கருத்தும் சிலரிடமிருந்து வந்தது.

சோழிங்கநல்லூர் தொகுதியை எப்படியும் தி.மு.கவுக்கு பெறுவது என்பதில் அத்தொகுதி நிர்வாகிகள் உறுதியாக இருக்கின்றனர். கூட்டணி பேரத்தில் சோழிங்கநல்லுார் தொகுதியை திமுக விட்டுக்கொடுக்க நேர்ந்தால் தொகுதி நிர்வாகிகளை கருணாநிதி சரிகட்ட சிரமமாகவே இருக்கும்போல.

- எம்.செய்யது முகம்மது ஆசாத்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ