Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை மத்திய பட்ஜெட் நிறைவேற்றவில்லை: ஜெ. கருத்து!

சென்னை: மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

" 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய வரவு-செலவுத் திட்டம் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. இந்தியா தற்போது உலக அரங்கில் பொருளாதார நிலையில் விரைந்து வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஆனால் இதன் வளர்ச்சி மக்களுக்கான வேலைவாய்ப்புகளையும் பயன்களையும் உகந்த அளவுக்கு மேம்படுத்துவதாக அமையவில்லை.

கடந்த ஆண்டுகளைப் போலில்லாமல், 2015-16-ம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளில் திட்ட செலவு அதிகரித்துள்ளது. திட்ட செலவுக்காக, மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிற நிதிகள், நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு முன்பே, விரைவாக விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையை இது உறுதிசெய்கிறது.

2017-18-ம் ஆண்டு முதற்கொண்டு, திட்ட செலவு மற்றும் திட்டம் சாராத செலவு என்ற வேறுபாட்டை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக வருவாய் மற்றும் மூலதன செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு நான் மீண்டும் மீண்டும் தெரிவித்த கருத்தை மத்திய நிதித்துறை மந்திரி ஏற்றுக்கொண்டுள்ளதற்கு மகிழ்ச்சி.

வேளாண்மை மற்றும் ஊரக வருவாய்க்கு முக்கியத்துவம் அளித்திருப்பது, வரவு-செலவு திட்டத்தில் வரவேற்கத்தக்க அம்சங்களாக உள்ளன. ஐந்தாண்டுகளில், உழவர்களின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவது பாராட்டத்தக்க நோக்கமாக உள்ளது. பாசன பரப்பை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிற அதே வேளையில், விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றி முடிக்கப்படாத திட்டங்களுக்காக, பிரதம மந்திரியின் உழவர் பாசன திட்டத்தின் கீழ் ஒதுக்கீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பல்வேறு பெரிய மற்றும் நடுத்தர பாசன திட்டங்களை நிறைவேற்றி முடிக்காத மாநிலங்களுக்கு ஒரு சார்பாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் வேளையில், நிலத்தடி நீர் பாசன வளத்தை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு தவிர்க்கப்படுதல் போன்ற பழைய தவறுகள் மீண்டும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கவலை.

மத்திய அரசு, மண்வள திட்டம், மண்வள அட்டை திட்டத்தை விரிவுபடுத்தியிருப்பது, இந்தத் திட்டத்தில் முன்னோடியாகவுள்ள தமிழ்நாட்டில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது. பிரதம மந்திரியின் பயிர் காப்புறுதித் திட்டம், ஒரு வரவேற்கத்தக்க திட்டமாகும். ஆனால் அதற்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி அளவில் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதாது.

உணவு, உரம் போன்ற பயன்பாட்டுப் பொருட்களை விலை கொடுத்து கொள்முதல் செய்து, அதை மானிய விலையில் வழங்குவதற்குப் பதிலாக நேரடியாக அந்தந்த நிறுவனங்களே மானியப் பயன்களை பயனீட்டாளர்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து வழங்கும் முறையை நான் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளேன். மானியங்களின் மீதான சேமிப்பை விட மக்களுக்கு அந்த பொருட்கள் கிடைப்பதே பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஏற்பளிப்பு வழங்கப்பட்ட திட்டங்களை விரைவாக முடிப்பதை உறுதி செய்வதற்காக கணிசமான மூலதன உயர்வை கோரியிருந்தேன். பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிக முதலீடு வரவேற்கத்தக்கதாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து விரைவாக நிதி வழங்குதலை எதிர்பார்க்கிறேன்.

தேசிய ஊரக எண்ம எழுத்தறிவு இயக்கத்தை அறிவித்திருப்பது, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை அங்கீகரித்ததாக அமைந்துள்ளது. எரிவாயு இணைப்பை 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு வழங்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். இது குடும்பச் செலவு நெருக்கடியை குறைக்க உதவும். இதே நோக்கத்தில்தான் தமிழகத்தில் எனது அரசு, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மானிய விலையில் எரிவாயு இணைப்பைப் பெறும் குடும்பங்கள் அனைத்தையும் அடையாளம் காண்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் இதுவரை அந்த இணைப்பு கிடைக்காத மிகுந்த ஏழை குடும்பங்கள் விடப்பட்டு விடக்கூடாது.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா திட்டத்தின் கீழ் மூவாயிரம் புதிய மருந்துக்கடைகள் திறக்கப்படும் என்று கூறியிருப்பது, தமிழகத்தில் எனது அரசு தொடங்கியுள்ள அம்மா மருந்தகங்கள் என்ற திட்டத்தைப் போன்றதுதான். ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்க்கான காப்பீட்டை ஏழை குடும்பங்கள் பெறக்கூடிய அளவில் புது சுகாதார பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அது, தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் நான் கொண்டுவந்த முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைப் போன்றதாகும். தமிழக சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மத்திய அரசு ஒருங்கிணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றை தூண்டும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடக்கியுள்ளதை வரவேற்கிறேன். இத்தகைய முயற்சிகளை வடிவமைத்து செயல்படுத்தும்போது மாநில அரசுகளையும் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டும். ராஷ்டிரீய மத்யமிக் சர்வசிக்ஷா அபியான் திட்டத்துக்கான ஒதுக்கீடு மிகமிக குறைவானது. தேசிய வேலைவாய்ப்பு மையம் மேம்படுத்தப்பட்டு அவை மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களுடனும் இணைக்கப்படும் என்ற கருத்து வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தம் செய்து, பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சாலை போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டம், என்னை கவலையடையச் செய்கிறது. இத்தகைய பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளோம்.

உள்கட்டமைப்பு வசதியில், அரசு-தனியார் பங்கேற்பு முறையை எளிதாக்க வகை செய்யும் சில நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அன்னிய நேரடி முதலீட்டை பொறுத்தவரையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளிக்கும் திட்டம், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு குறுக்கு வழியை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. அதை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன்.

சட்ட விரோதமாக சேமிப்பை ஏற்றுக்கொள்வதைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான சட்டம் கொண்டு வரும் யோசனையை வரவேற்கிறோம். இத்தகைய சட்டங்களை செயல்படுத்தும் நேர்வுகளில் மாநில அரசு எந்திரம் முன்னணியில் இருப்பதால், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். மேலும், சட்டவிரோத சேமிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க மாநில அரசுகளுக்குப் போதிய, உரிய பங்கினை அளிப்பதற்கு வசதி செய்யப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்வதற்காக மொத்தம் ரூ.25 ஆயிரம் கோடி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதையும்; தேவைப்பட்டால், மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்ததையும் வரவேற்கிறேன். நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அமைக்கப்படும் குழு, மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத வரிகளின் மீது உபரி வரி மற்றும் மேல்வரி விதிப்பதை மத்திய நிதி மந்திரி தவிர்க்காதது துரதிருஷ்டவசமானது. சேவை வரி மீது ‘‘கிருஷ் கல்யாண் தீர்வை’’ விதிப்பது; வாகனங்கள் மீதான ஆயத்தீர்வைக்கு கட்டுமான உபரிவரி விதிப்பது;

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி மீது ‘‘தூய்மையான சூழல்’’ வரியை இரு மடங்காக உயர்த்துவது; புதிய வரிவிதிப்புத் திட்டங்களிலும் மேல்வரியை விதிப்பது ஆகியவை பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் ஆகும். இந்த வழிகள் வரி விதிப்பு நடைமுறைகளை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்வதை மத்திய அரசு தவிர்க்கிறது. இந்தச் செயல்பாட்டை நான் விரும்பவில்லை.

அலைக்கற்றைப் பயன்பாட்டை, புலப்படாத பொருள் விற்பனையாகக் கருதுவதற்குப் பதிலாக சேவையாகக் கருதுவது, மாநில அரசுகளின் வரி அடித்தளத்தையே பாதிக்கிறது. ஆனால் இந்திய அரசின் வரி ஆதாரத்தை உயர்த்துகிறது. எனவே, இந்த யோசனையை நான் எதிர்க்கிறேன். எனினும், மொத்தத்தில், வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள வரிச் செயற்குறிப்புகள், பின்னடவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதில், ஆயிரத்து 60 கோடி ரூபாய் மதிப்பிலான நேரடி வரிச் சலுகைகள் உள்ளன. பெரும்பாலான வரிச்சலுகைகள் நிறுவன வருமான வரிச்சலுகைகளால் ஏற்படுகின்றன.

ரூ.20 ஆயிரத்து 670 கோடி மதிப்பிலான மறைமுக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இது, குறிப்பிட்ட காலந்தோறும் விதிக்கப்படுகிற, பெட்ரோலியத் தயாரிப்புப் பொருட்கள் மீதான மத்திய ஆயத்தீர்வை உயர்வுகளில் இது முதலிடம் வகிக்கிறது. இத்தயாரிப்புப் பொருட்கள், நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தியில் வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், இது வரவேற்க இயலாத ஒன்றாகும்.

மாநிலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் மகிழ்விக்கிற எவ்விதமான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இல்லாத காரணத்தால், எந்த தனிச்சிறப்பையும் இந்த பட்ஜெட் பெற்றிருக்கவில்லை. கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் செயல்பாட்டு நிலையை இது எடுத்துரைக்கவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். ஆனால், அவை எவையும் நிறைவேற்றப்படவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close